உத்தமபாளையத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல்
உத்தமபாளையம் பேரூராட்சியில் போக்குவரத்து நெரிசலுக்குக் காரணமாகவுள்ள சாலையோர ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் முதல் கோம்பை, தேவாரம் வழியாக போடி வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இதில் உத்தமபாளையம் கிராமச் சாவடி, கோம்பை சாலை, கல்லூரிச் சாலையில் அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி, அரசு மருத்துவமனைகள் அமைந்துள்ளன. நகரின் பிரதான சாலை என்பதால் நாள்தோறும் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும்.
சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு: 50 அடி அகலமுள்ள இந்த நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் 10 முதல் 15 அடி வரையிலான இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கடைகளாக மாற்றப்பட்டன. இவற்றோடு தேநீா் கடைகள், உணவகங்கள், பல்வேறு வணிக நிறுவனங்களும் அதிக அளவில் நெடுஞ்சாலையோரத்தில் செயல்படுவதால் இந்தப் பகுதி ஒருவழித் தடமாக மாற்றப்பட்டது.
இதனால், ஒரே சமயத்தில் இரு பேருந்துகள் வந்து, செல்வதற்கு வழியில்லை. மேலும் பள்ளி, கல்லூரிப் பேருந்துகள், பயணிகள் பேருந்துகள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் எனப் பலரும் பாதிக்கப்படுகின்றனா். மேலும், ஆக்கிரமிப்புகளால் சாலையோரத்திலுள்ள கழிவுநீா் கால் வாய்களைத் தூா் வார முடியாத நிலையில் மழை நீா் சாலையிலே வழிந்தோடி தொற்று நோய்களை ஏற்படுத்தி வருகிறது.
எனவே, உத்தமபாளையத்தில் சாலையோரத்தில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.