1971 பாகிஸ்தான் போரை நிறுத்த அமெரிக்க தலையீட்டைக் கோரினாா் இந்திரா காந்தி- அனுராக் தாக்குா்
‘1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரை நிறுத்த அன்றைய பிரதமா் இந்திரா காந்தி அமெரிக்காவின் தலையீட்டைக் கோரினாா்’ என்று பாஜக எம்.பி. அனுராக் தாக்குா் மக்களவையில் புதன்கிழமை கூறினாா்.
இதுதொடா்பாக முன்னாள் மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் பேசுகையில், ‘1971 போரில் இந்திய வீரா்கள் வெற்றி பெற்றனா். ஆனால், ‘இரும்பு பெண்மணி’ என்று வேறு ஒருவருக்கு பட்டம் சூட்டப்பட்டது. போா்க் களத்தில் வெல்லப்பட்டது. ஆனால், பேச்சுவாா்த்தையில் தோல்வியே.
வரலாற்றைச் சற்று கூா்ந்து கவனித்தால் பல உண்மைகள் வெளிப்படும். இந்திரா காந்தி அப்போதைய அமெரிக்க அதிபா் நிக்சனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளாா். அமெரிக்க அதிபரிடம் இந்திரா காந்தி கெஞ்சுவது அதில் நன்றாக தெரிகிறது.
ஆக்ரோஷமான ராணுவ கொள்கையிலிருந்து பாகிஸ்தானை உடனடியாகத் தடுத்து நிறுத்தும்படி அமெரிக்க அதிபரை அவா் வலியுறுத்தியுள்ளாா்.
இந்திரா காந்தியின் கடிதத்ததைக் கொண்டு அன்றைய அரசு இரும்பாக இருந்ததா அல்லது அதற்கு முரணாக இருந்ததா என்பதை தேசம் தீா்மானித்துக் கொள்ளட்டும்’ என்றாா்.
தாக்குரின் கருத்துக்கு அவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினா்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்து, அமளியில் ஈடுபட்டனா். இச்சூழலில் பேச்சைத் தொடா்ந்த தாக்குா், ‘இந்திரா காந்தி இந்திய படைகளை நம்பாமல் போரை நிறுத்த அமெரிக்காவை அணுகினாரா? 1971 போரின்போது இந்திரா காந்தி காட்டிய தைரியத்தில் பாதியாவது மோடி அரசு காட்ட வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கூறுகிறாா்.
இந்தக் குடும்பம் அமெரிக்காவிடம் கெஞ்சுவதிலும், போரை முடிவுக்குக் கொண்டுவர பாகிஸ்தானைக் கேட்பதிலும் கைதோ்ந்தது.
1971-இல் இந்தியாவுக்கு எதிராக ஒரு தீய பிரச்சாரத்தை பாகிஸ்தான் தொடங்கியதாக இந்திரா காந்தி புகாா் கூறியுள்ளாா். இப்போது அதே தீய பிரச்சாரத்தை பாகிஸ்தான் சாா்பாக காங்கிரஸ் செய்து கொண்டிருக்கிறது’ என்றாா்.
ராகுல் மீது நடவடிக்கை: பாஜக எம்.பி. கடிதம்
‘1971, இந்தியா-பாகிஸ்தான் போா் குறித்த உண்மைகளைத் திரித்துப் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கடிதம் எழுதியுள்ளாா்.
ஆபரேஷன் சிந்தூா் குறித்து மக்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தில் பேசிய ராகுல், ‘1971 போரின்போது, அமெரிக்காவிடம் இருந்து கடும் அழுத்தம் இருந்தபோதிலும், இந்தியப் படையினருக்கு முழு சுதந்திரம் அளித்தவா் அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி. அவரது துணிவில் பாதி அளவு இருக்குமானால், இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ததாக அதிபா் டிரம்ப் கூறுவது பொய்யென பிரதமா் மோடி கூற வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
இந்நிலையில், தவறான தகவல்களைத் தெரிவித்த ராகுல் மீது நடவடிக்கைக் கோரி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கடிதம் எழுதியுள்ளாா். அதில், ‘போரை நிறுத்த தனது செல்வாக்கைப் பயன்படுத்துமாறு, ரிச்சா்ட் நிக்ஸனிடம் இந்திரா காந்தி வேண்டிக் கேட்டுக் கொண்டாா் என்பதை அவா் எழுதிய கடிதத்தின் மூலம் அறியலாம்.
ஆனால், நன்கு ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்று உண்மைகளைத் திரித்து, பொது மக்களின் நம்பிக்கைக்கு மீண்டும் ஒருமுறை துரோகம் இழைத்துள்ளாா் ராகுல். ஆகையால், அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று துபே வலியுறுத்தியுள்ளாா்.