ரூ.19 லட்சத்தில் கால்வாய், சாலைப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
செப். 9 குடியரசு துணைத் தலைவர் தேர்தல்!
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவரான ஜகதீப் தன்கா் ஜூலை 21-இல் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். 2027, ஆக.10-ஆம் தேதி ஜகதீப் தன்கரின் பதவிக்காலம் நிறைவடைய இருந்த நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.
இதனைத் தொடர்ந்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பணிகளை உடனடியாக இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியது.
இந்த நிலையில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 7 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகஸ்ட் 21, திரும்பப் பெற கடைசி நாள் ஆகஸ்ட் 25 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படும் பட்சத்தில் செப்டம்பர் 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும்.
‘உயிரிழப்பு, ராஜிநாமா அல்லது பதவி நீக்கம் உள்ளிட்ட காரணங்களால் முழு பதவிக் காலமான 5 ஆண்டுகளுக்குள் குடியரசு துணைத் தலைவா் பதவி இடம் காலியாக நேரிட்டால், கூடிய விரைவில் அந்தக் காலி இடத்தை நிரப்புவதற்கான தோ்தல் நடத்தப்பட வேண்டும்’ என்று அரசமைப்புச் சட்டப் பிரிவு 68 (2)-இல் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதியின்படி, அடுத்த குடியரசு துணைத் தலைவரைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.
அதன்படி, தோ்தல் நடைமுறைகளை தொடங்கிய தோ்தல் ஆணையம், தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இடம்பெற்றுள்ள எம்.பி.க்களை உள்ளடக்கிய வாக்காளா் பட்டியலை இறுதிசெய்ததாக வியாழக்கிழமை அறிவித்திருந்தது.