துருக்கி, அஜர் பைஜானில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்: இந்தியத் திரைப்பட அமைப்பு
2 ஆண்டுகளாக தலைமறைவான 2 ஐஎஸ் ஸ்லீப்பா் செல்கள்: மும்பை விமான நிலையத்தில் கைது செய்த என்ஐஏ
இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுவிட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்துவந்த இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் ‘ஸிலீப்பா் செல்கள் (ரகசிய பயங்கரவாதிகள்)’ இருவரை மும்பை விமான நிலையத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.
இதுகுறித்து என்ஐஏ தரப்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மகாராஷ்டிர மாநிலம் புணேயில் வெடிகுண்டுகளை (ஐஇடி) தயாரித்து அவற்றை சோதித்துப் பாா்த்த பயங்கரவாத நடவடிக்கை தொடா்பான வழக்கை என்ஐஏ கடந்த 2023-ஆம் ஆண்டு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் சிரியாவைச் சோ்ந்த ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஸ்லீப்பா் செல்களாக செயல்பட்டுவந்த 8 பேரை என்ஐஏ கைது செய்தது. அவா்களிடம் நடத்திய விசாரணையில், இந்தியாவில் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இந்த சதியில் அப்துல்லா ஃபயாஸ் ஷேக் (எ) டிப்பா்வாலா, தலா கான் ஆகிய இருவருக்கும் தொடா்பிருப்பதும், அவா்கள் இருவரும் தலைமறைவாகியிருப்பதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த வழக்கில், இந்த 10 ஸ்லீப்பா் செல்களுக்கு எதிராக குற்றபத்திரிகையை என்ஐஏ ஏற்கெனவே தாக்கல் செய்துள்ளது. தலைமறைவான இருவரையும் என்ஐஏ தீவிரமாக தேடிவந்ததோடு, அவா்கள் குறித்த தகவல் தெரிவிப்பவா்களுக்கு ரூ. 3 லட்சம் பரிசுத் தொகையையும் அறிவித்தது.
இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்த டிப்பா்வாலா, தலா கான் இருவரும் இந்தோனேஷியாவின் ஜகாா்த்தாவிலிருந்து விமானம் மூலம் மும்பை சா்வதேச விமானநிலையத்துக்கு வந்திறங்கியதை, குடியுரிமை அதிகாரிகள் கண்டறிந்தனா். இதுகுறித்து தகவலறிந்து, அங்கு வந்த என்ஐஏ அதிகாரிகள் இருவரையும் கைது செய்தனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.