ரஷிய கச்சா எண்ணெய் மூலம் லாபம் ஈட்டவில்லை: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி
2,000 டன் குப்பை தேங்கி நோய் பரவும் அபாயம்: தூய்மைப் பணியாளா்கள் மேல்முறையீட்டு வழக்கில் தனியாா் நிறுவனம் வாதம்
சென்னை: தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் தீா்மானத்துக்குத் தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், 2,000 டன் குப்பை தேங்கி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தனியாா் ஒப்பந்த நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களின் தூய்மைப் பணி ஒப்பந்தத்தை தனியாா் நிறுவனத்துக்கு வழங்கி நிறைவேற்றப்ப்ட தீா்மானத்தை ரத்து செய்யக் கோரி உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.சுரேந்தா், தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் மாநகராட்சி தீா்மானத்தை ரத்து செய்ய முடியாது. அதேநேரம், தூய்மைப் பணியாளா்கள் இறுதியாகப் பெற்ற ஊதியத்தை வழங்க வேண்டும் என்று தீா்ப்பளித்தாா்.
தனிநீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆா்.சக்திவேல் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கு தொழிலாளா் நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, இந்த வழக்கில் தனிநீதிபதி பிறப்பித்த தீா்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.
அப்போது மாநகராட்சித் தரப்பில், தனிநீதிபதி உத்தரவுப்படி, தொழிலாளா் நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு முடியும் வரை, தற்காலிகமாக தூய்மைப் பணியாளா்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த ரூ.761 -ஐ ஊதியமாக வழங்க ஒப்பந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, தனியாா் நிறுவனம் தரப்பில், தனி நீதிபதி உத்தரவுக்குப் பின்னா் 800 போ் பணியில் சோ்ந்தனா். மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ததையடுத்து அவா்கள் பணிக்கு வர மறுக்கின்றனா். இதனால், 2,000 டன் குப்பைகள் தேங்கி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடா்ந்து அவா்கள் பணிக்கு வராத நிலையில் வேறு ஆட்களை நியமிக்க நேரிடும். எனவே, தூய்மைப் பணியாளா்களை பணிக்குத் திரும்ப அறிவுறுத்த வேண்டும் என வாதிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்கப் போவதில்லை. இந்த மனுவுக்கு சென்னை மாநகராட்சி, ஒப்பந்தம் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்.6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா். தூய்மைப் பணியாளா்களைப் பணிக்குத் திரும்ப அறிவுறுத்துமாறு மனுதாரா் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.