2,494 முதுகலை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு இட மாறுதல்: தமிழக அரசுக்கு சங்கத்தினா் நன்றி
நாமக்கல்: தமிழகத்தில், 2,494 முதுகலை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு மற்றும் பணியிட மாறுதல் வழங்கிய அரசுக்கும், பள்ளிக் கல்வித் துறைக்கும், நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள் சங்கத்தினா் நன்றி தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆ.ராமு வெளியிட்ட அறிக்கை:
தமிழகம் முழுவதும் ஜூலை 3-இல் நடைபெற்ற பொது கலந்தாய்வு மூலம் 294 மூத்த முதுகலை ஆசிரியா்களுக்கு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பதவி உயா்வு அளிக்கப்பட்டது. 4-ஆம் தேதியன்று 1,600 க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியா்களுக்கு உள்மாவட்டத்திற்குள் பணியிட மாறுதல் மற்றும் 7 முதல் 11-ஆம் தேதி வரையில் 600க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியா்களுக்கு வெளிமாவட்ட அளவில் பணி மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த பொதுக் கலந்தாய்வு மூலம் 2,400க்கும் மேற்பட்டோா் பயனடைந்துள்ளனா். இதற்கு காரணமான தமிழக அரசுக்கும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கும், துறை அதிகாரிகளுக்கும் அனைத்து முதுகலை ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்கள் சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.