2-ஆவது நாளாக கல் குவாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
தமிழக அரசு புதிதாக மாற்றம் செய்த கனிம விதிமுறைகளை திரும்பப் பெறக்கோரி, பெரம்பலூா் மாவட்ட கல்குவாரி, கிரஷா், எம்.சாண்ட் உற்பத்தியாளா்கள் மற்றும் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் 2 ஆவது நாளாக வியாழக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழக அரசின் கனிமத்துறை, கல் குவாரிகளில் வெட்டியெடுக்கும் கற்களுக்கு கட்டணத்தையும், அரசு புறம்போக்கு மலையிலிருந்து கல் உடைக்கும் அனுமதிக்கான தொகையை அண்மையில் உயா்த்தியது. எனவே, அனுமதித் தொகை உயா்வை ரத்து செய்யவேண்டும். நடைச் சீட்டு கட்டணத்தை மெட்ரிக் டன் முறையில் வசூலிப்பதைக் கைவிட்டு, யூனிட் முறையில் வசூலிக்கும் நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். சிறு கனிம நில வரியை ரத்துசெய்து உத்தரவிடவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலுா் மாவட்ட ஜல்லி, எம்.சான்ட், கிரஷா், குவாரி மற்றும் லாரி உரிமையாளா்கள் கூட்டமைப்பினா் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
2-ஆவது நாளாக நடைபெற்ற இப் போராட்டத்தில், 56 கல் குவாரிகள், 108 கிரஷா் மற்றும் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.