20 ஹெக்டேருக்கு மீன் வளா்ப்பு மானியம்
திருச்சி மாவட்டத்தில் நிகழாண்டு 20 ஹெக்டேருக்கு மீன் வளா்ப்பு மானியம் வழங்கப்படவுள்ளதால் தகுதியானோா் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி மாவட்ட மீன் வளா்ப்பு விவசாயிகள், மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமை உறுப்பினா்களுக்கு ஒரு ஹெக்டோ் பரப்பளவு மீன் பண்ணைக்கு 10,000 எண்ணம் மீன்குஞ்சுகள் வீதம் ரூ.5,000 மானியம் வழங்கப்படுகிறது.
இதன்படி, திருச்சி மாவட்டத்துக்கு 20 ஹெக்டேருக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.5,000 வீதம் 10,000 எண்ணம் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் என்ற விகிதத்தில் மானியம் வழங்கப்படவுள்ளது.
மேலும், 2025-26-ஆம் ஆண்டுக்கு மீன்வளா்ப்பு உள்ளீட்டு மானியமாக வழங்கும் திட்டத்தின் கீழ் ஆா்வமுள்ள விவசாயிகள் பயனடைய கீழ்காணும் முகவரியில் இயங்கி வரும் மாவட்ட மீன்வளா்ப்போா் மேம்பாட்டு முகமை, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரில் சந்தித்து கூடுதல் விவரங்கள் பெறலாம். விண்ணப்பங்களும் சமா்ப்பிக்கலாம்.
அலுவலக முகவரி: உறுப்பினா் செயலா், மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமை, உதவி இயக்குநா் அலுவலகம், மீன் வளம் மற்றும் மீனவா் நலத்துறை ஒருங்கிணைந்த மீன்வள அலுவலக வளாகம் –தரைத்தளம், கொட்டப்பட்டு, திருச்சி மாவட்டம் - 620 023. தொலைபேசி எண்: 0431 - 2421173.