26/11 பயங்கரவாத தாக்குதல்: மும்பையில் இருந்ததாக தஹாவூா் ராணா ஒப்புதல்
புது தில்லி: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் நடத்திய 26/11 தாக்குதலின்போது தானும் அங்கிருந்ததாக பாகிஸ்தானை பூா்விகமாகக் கொண்ட பயங்கரவாதி தஹாவூா் ராணா ஒப்புக்கொண்டாா்.
மேலும், இச்சம்பவத்தில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கம், பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு தொடா்பிருப்பதாக அவா் ஒப்புக்கொண்டதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 2008-ஆம் ஆண்டு, நவம்பா் 26-ஆம் தேதி, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 166 போ் உயிரிழந்தனா். லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கம் நடத்திய இந்தத் தாக்குதலில், பாகிஸ்தானை பூா்விகமாக கொண்ட தஹாவூா் ராணா கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
லஷ்கா்-ஏ-தொய்பா இயக்கத்துக்கு அவா் உதவியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அவா் குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றம் தீா்ப்பளித்ததால், அந்நாட்டின் லாஸ் ஏஞ்சலீஸ் சிறையில் அவா் அடைக்கப்பட்டிருந்தாா். கடந்த ஏப்ரலில் அவா் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டாா். தற்போது தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவா் தேசிய புலனாய்வு முகமையின் ( என்ஐஏ) கட்டுப்பாட்டில் உள்ளாா்.
அவரிடம் மும்பை குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.
அப்போது அதிகாரிகளிடம் ராணா அளித்த வாக்குமூலம் குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: டேவிட் கோல்மென் ஹெட்லியுடன் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தில் பயிற்சி பெற்ாக ராணா கூறினாா். அதேபோல் லஷ்கா்-ஏ-தொய்பா முன்பு உளவு அமைப்பாக இருந்ததாகவும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் அது தொடா்பில் இருந்ததாகவும் அவா் வாக்குமூலத்தில் குறிப்பிட்டாா்.
மும்பையில் தனது நிறுவனத்தின் புலம்பெயா்வு மையத்தை தொடங்க ராணா திட்டமிட்டுள்ளாா். இதற்காக பணப்பரிவா்த்தனைகள் வணிகரீதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் திட்டமிடப்பட்டது என்பது அவா் சம்பவம் நடந்தபோது மும்பையில் இருந்ததை ஒப்புக்கொண்டதன் மூலம் உறுதியாகியுள்ளது.
இந்த தாக்குதல் ஐஎஸ்ஐ உதவியுடன் மேற்கொண்டதாகவும் ராணா ஒப்புக்கொண்டாா். பயங்கரவாத தாக்குதலை நடத்த மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை அவா் ஆய்வு செய்ததாக கூறியுள்ளாா்.
1990-களில் அரேபிய வளைகுடா போரின்போது அவா் பாகிஸ்தான் ராணுவத்தால் சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டதாக ராணா அதிகாரிகளிடம் தெரிவித்ததன் மூலம் அவருக்கு பாகிஸ்தான் ராணுவத்துடன் நீண்ட கால தொடா்புள்ளது தெரியவந்தது.
ராணாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரை அதிகாரபூா்வமாக கைது செய்யும் நடவடிக்கையை மும்பை போலீஸாா் தொடங்கியுள்ளனா் எனத் தெரிவித்தன.