278 சவரன் திருட்டு; 4 மாதங்களுக்குப் பிறகு சிக்கிய `மங்கி குல்லா’ கொள்ளையன் - தூக்கிட்ட தாயார்
278 சவரன் தங்க நகை கொள்ளை!
நெல்லை அருகேயுள்ள மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் ஆரோக்கிய ரெமன். இவர், அதே ஊரிலுள்ள கடைத் தெருவிலுள்ள ஒரு வணிக வளாகத்தில் முதல் மாடியில் பாத்திரக் கடையுடன் கூடிய தங்க நகை அடகுக்கடையையும் நடத்தி வருகிறார். இந்த அடகுக்கடையில் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி, 278 சவரன் தங்க நகைகளும், ரூ.3 லட்சம் ரொக்கப்பணமும் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரபினை ஏற்படுத்தியது. இந்த அடகுக்கடையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் படாததால் கொள்ளையர்கள் எத்தனை பேர்? அவர்களது அடையாளங்கள் என்ன? என்பது தெரியாமல் போலீஸார் ஆரம்பத்தில் திணறினர்.
இதனால் கடைத்தெருவிலுள்ள மற்ற கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது ‘மங்கி குல்லா’ அணிந்த மர்ம நபர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதில் அந்த நபர் அடகுக்கடையின் பின்பக்கமாக ஜன்னலை உடைத்துவிட்டு நகைகளை கொளையடித்துவிட்டு நகைகளோடு நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் தப்பிச் சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து போலீஸார் விசாரணையை தீவிரப் படுத்தினர். இந்த நிலையில் 4 மாதங்களுக்குப் பிறகு அந்த மர்ம நபரை கைது செய்து 140 சவரன் தங்க நகைகளை மீட்டுள்ளனர்.
‘மங்கி குல்லா’ கொள்ளையன் பிடிபட்டது எப்படி என தனிப்படை போலீஸாரிடம் பேசினோம், “இந்த பெரும் கொள்ளைச் சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்திவிட்டது. நாங்குநேரி ஏ.எஸ்.பி பிரசன்ன குமார் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. பல்வேறு கோணங்களில் விசாரணையை நடத்தினோம். மூலைக்கரைப்பட்டியில் இருந்து ரெட்டியார்பட்டி வரையுள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தோம். அதில் மங்கி குல்லா அணிந்த மர்மநபர் ஒருவர் பைக்கில் தப்பிச் சென்ற காட்சிப் பதிவுகள் மூலம் விசாரணை நடத்தியும் அந்த கொள்ளையன் குறித்து போதிய தடயங்கள் எடுவும் கிடைக்கவில்லை. கொள்ளை நடந்த அன்றைய கண்காணிப்பு கேமரா பதிவுகள் மட்டுமின்றி அதற்கு முந்தைய நாளில் அடகுக்கடையை யாரேனும் நோட்டமிட்டார்களா? எனத் தெரிந்து கொள்ளவும் பல கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்தோம்.
அப்போதும் விசாரணை அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. மற்றொரு தனிப்படை போலீஸார் சிங்கிளாக ‘மங்கி குல்லா’ அணிந்து தமிழகத்தில் வேறு எங்கும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டாரா எனவும் ஆய்வு செய்து அந்த இடங்களுக்கும் சென்று விசாரணை நடத்தினார்கள். குறிப்பாக மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை நடத்தப்பட்டும் அந்த கொள்ளையனைப் பற்றி எந்த துப்பும் துலங்கவில்லை.
அதே நேரத்தில் மற்றொரு தனிப்படை போலீஸார் வணிக வளாகத்தில் ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு அடகுக்கடையில் கொள்ளையடிக்க வேண்டுமென்றால் அதைப்பற்றி நன்கு தெரிந்தவர்கள் உதவியிருக்கக் கூடும் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். அந்தக் கடையின் ஊழியர்கள், அந்த பகுதியைச் சேர்ந்தவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஆனாலும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. கொள்ளைச் சம்பவ நேரத்தில் சம்பவ இடத்தில் அழைப்புகள் மேற்கொள்ளப்பட்ட செல்போன் எண்கள் அனைத்தையும் ஆய்வு செய்து சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், அந்தக் கொள்ளையன் சம்பவத்தின் போது செல்போன் பயன்படுத்தாதது பின்னரே தெரிய வந்தது.
இதனால், இந்த வழக்கு முடிக்கப்படாமல் 4 மாதங்களாக நடந்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் அனைத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை நன்கு உன்னிப்பாக கவனித்தோம். அதில், கொள்ளைச் சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் மர்ம நபர் ஒருவர் தலையில் குல்லா அணிந்து நீண்ட நேரமாக அடகுக்கடையை நோட்டமிடுவதை கவனித்தோம். நாங்குநேரி குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜகுமாரி, கடந்த 2014-ல் நாசரேத் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய போது ஒரு திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட குல்லா அணிந்த நபர் போல உள்ளதே என சந்தேகித்தார்.
இதனால், நாசரேத் திருட்டுச் சம்பவம் தொடர்பான வழக்கு விவரங்களை ஆய்வு செய்த போது அந்த சம்பவத்தில் ஈடுபட்டு கைதான மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள ரெட்டார்குளம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது விவரங்கள் சேகரிக்கப்பட்டது. அவர் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகேயுள்ள செகந்தராபாத்தில் இருப்பதை கண்டுபிடித்து தனிப்படை போலீஸார் அங்கு சென்று ராமகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில்தான் அடகுக்கடையில் 278 சவரன் தங்கநகைகளை கொள்ளையடித்துச் சென்றதும் அந்த மங்கி குல்லா கொள்ளையன் அவர்தான் என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடமிருந்தும் இருந்தும் ரெட்டார்குளத்தில் உள்ள அவரது தாயார் மீனாட்சி என்பவரிடமிருந்தும் 140 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டது.
மீதம் உள்ள நகைகள் எங்கே இருக்கிறது என அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில்தான் போலீஸாரின் விசாரணைக்குப் பயந்து அவரது தாயார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கைது செய்யப்பட்ட ராமகிருஷ்ணன் தனி ஆளாகச் சென்று திருடுவதை தனது பாணியாக வைத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் 2 இடங்களிலும், சென்னையில் 3 இடங்களிலும் குல்லா அணிந்து கொண்டு தனி ஆளாக திருடியுள்ளார். ஒவ்வொரு திருட்டுச் சம்பவத்திற்குப் பிறகும் தெலுங்கானா மாநிலத்திற்குச் சென்று சில காலம் தலைமறைவாக இருந்து பின் சொந்த ஊருக்கு வந்துவிடுவாராம். தெலுங்கானா மாநிலத்திலும் அவர் மீது 7 திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது.” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs