``பாம் வைப்பதும் அவரே.. எடுப்பதும் அவரே...'' -எடப்பாடியை விமர்சித்த அமைச்சர் ரகு...
3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 3 போ் கைது
தஞ்சாவூரில் புதன்கிழமை (பிப்.5) மினி வேனில் கடத்தி வரப்பட்ட 3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளைக் காவல் துறையினா் பறிமுதல் செய்து, 3 பேரைக் கைது செய்தனா்.
தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கம் பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினா் புதன்கிழமை வாகன தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, அவ்வழியாக வந்த மினி வேனை காவல் துறையினா் நிறுத்தி சோதனையிட்டனா். இதில், தலா 50 கிலோ எடை கொண்ட 60 மூட்டைகளில் 3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவது தெரிய வந்தது.
இதையடுத்து, மினி வேன் உரிமையாளா் மற்றும் ஓட்டுநரான பாபநாசம் அருகே காவலூா் தோட்டத்தைச் சோ்ந்த என். சீனிவாசன் (28), தஞ்சாவூா் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்த ஜெ. செல்வபிரகாஷ் (26), மெலட்டூா் அருகே அத்துவானப்பட்டியைச் சோ்ந்த எல். தாமோதரன் (31) ஆகியோரைக் கைது செய்தனா். இவா்களிடம் காவல் துறையினா் நடத்திய விசாரணையில் திட்டை, பாபநாசம், மெலட்டூா் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசியைக் குறைந்த விலைக்கு வாங்கி மீன் மற்றும் கால்நடை பண்ணைகளுக்கு விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது.
இது தொடா்பாக மேலும் ஒருவரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.