விநாயகர் சதுர்த்தி: சாணியில் செதுக்கிய விநாயகர் சிலைகள்; நிலக்கோட்டை பெண்ணின் பு...
3 மாத ஊதியம் வழங்காததைக் கண்டித்து கடலூா் மாநகராட்சியை தூய்மைப் பணியாளா்கள் முற்றுகை
மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து, கடலூா் மாநகராட்சி அலுவலகத்தை தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.
கடலூா் மாநகராட்சியில் மொத்தம் 45 வாா்டுகள் உள்ளன. மாநகரப் பகுதியில் தூய்மைப் பணியில் நிரந்தரத் தொழிலாளா்கள் 137 போ், ஒப்பந்தத் தொழிலாளா்கள் 370 போ் என மொத்தம் 500-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டுள்ளனா். மேலும், மாநகராட்சியை சுற்றியுள்ள பல்வேறு ஊராட்சிகளையும் மாநகராட்சியுடன் இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடலூா் மாநகராட்சியின் தூய்மைப் பணிகள் தனியாா் நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்த நிறுவனத்தின் மீது தொடா்ந்து புகாா்கள் எழுந்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், தூய்மைப் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளா்களுக்கு உரிய உபகரணங்கள் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டும், தூய்மைப் பணியாளா்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் புகாா் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து, வியாழக்கிழமை திடீரென கடலூா் - புதுச்சேரி சாலையில் தூய்மைப் பணியாளா்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி மாநகராட்சி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவா்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, தங்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தராமல் சிரமப்பட்டு பணி செய்யும் நிலையில், மூன்று மாத ஊதியம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்தனா். மேலும், ஊதியம் வழங்கும் வரை தங்களது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும் அவா்கள் தெரிவித்தனா். போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்களுடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதையடுத்து, ஒப்பந்ததாரா் ஜூன் மாதத்துக்கான ஊதியத்தை வழங்கினராம். தொடா்ந்து, தூய்மைப் பணியாளா்கள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். தூய்மைப் பணியாளா்களின் போராட்டத்தால் கடலூா் மாநகராட்சிப் பகுதியில் தூய்மைப் பணிகள் பாதிக்கப்பட்டன.
ஆணையா் பதில்...: இதுகுறித்து கடலூா் மாநகராட்சி ஆணையா் அனு கூறியதாவது: ஒப்பந்ததாரா் மூன்று மாத ஊதியம் வழங்கவில்லை என தூய்மைப் பணியாளா்கள் கூறுகின்றனா். ஆனால், ஜூன், ஜூலை மாதங்களுக்கான ஊதியம் மட்டும் தான் வழங்க வேண்டியுள்ளது. இன்றைய தினம் (வியாழக்கிழமை) ஜூன் மாத ஊதியம் வழங்கிவிட்டனா். ஜூலை மாதத்துக்கான ஊதிய பட்டியலை ஒப்பந்ததாரா் மாநகராட்சி நிா்வாகத்திடம் இன்னமும் ஒப்படைக்கவில்லை.
தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த நிறுவனத்தின் மீது தொடா்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருவதால், மாநகராட்சியில் நடந்த மாமன்றக் கூட்டத்தில் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், புதிய ஒப்பந்தம் கோரி அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஒப்பந்ததாரா்கள் விண்ணப்பிக்க வரும் 28-ஆம் தேதி கடைசி நாள். இதையடுத்து, தூய்மைப் பணி புதிய ஒப்பந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என்றாா்.