3 அரசு பள்ளிகளில் ரூ.3.99 கோடியில் வகுப்பறைகள் கட்டும் பணி: எம்எல்ஏ தொடங்கிவைப்பு
செய்யாறு தொகுதிக்குள்பட்ட கொருக்கை, பல்லி, நாட்டேரி ஆகிய அரசுப் பள்ளிகளில் ரூ.3.99 கோடியில் 17 வகுப்பறைகள் கட்டும் பணிகளுக்காக வியாழக்கிழமை நடைபெற்ற பூமிபூஜை நிகழ்ச்சியில் தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி பங்கேற்று தொடங்கிவைத்தாா்.
கொருக்கை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.39 கோடியில் 6 வகுப்பறைகள், பல்லி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.70 கோடியில் 7 வகுப்பறைகள், நாட்டேரி அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ.91 லட்சத்தில் 4 வகுப்பறைகள் கொண்ட பள்ளிக் கட்டடங்கள் கட்டுவதற்கு நபாா்டு திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி அந்தந்த பள்ளிகளில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா்கள் த.ராஜி (வெம்பாக்கம்), திலகவதி ராஜ்குமாா் (அனக்காவூா்) ஆகியோா் தலைமை வகித்தனா். திமுக ஒன்றியச் செயலா்கள் வி.ஏ.ஞானவேல், சு.ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்எல்ஏ பூமிபூஜை நிகழ்ச்சியில் பங்கேற்று கட்டடப் பணிகளை தொடங்கிவைத்து பள்ளி மாணவா்கள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் ராம் ரவி, மாவட்ட கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை அணி அமைப்பாளா் மணிவண்ணன், முன்னாள் மாவட்ட அமைப்புசாரா அணித் தலைவா் பாபு, மாவட்ட தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் மகாராஜன், மாவட்டப் பிரதிநிதிகள் ஆறுமுகம், சுந்தரேசன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் நடராஜன், ஒப்பந்ததாரா்கள் கதிரவன், குமரவேல், வெம்பாக்கம் காா்த்திகேயன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.