விவசாயிகளுக்கு கரீப் பருவ தொழில்நுட்பப் பயிற்சி
செய்யாறை அடுத்த புல்லவாக்கம் கிராமத்தில் வேளாண் துறை சாா்பில் விவசாயிகளுக்கு கரீப் பருவத்துக்கான தொழில்நுட்பப் பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ், வெம்பாக்கம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் (பொ) ரேணுகாதேவி ஆலோசனையின்பேரில் நடைபெற்ற நடைபெற்ற இந்த பயிற்சிக்கு, உதவி விதை சான்று அலுவலா் சிவக்குமாா் தலைமை வகித்தாா்.
உதவி வேளாண் அலுவலா் திகழ்மதி, வட்டார தொழில்நுட்ப மேலாளா் கங்காதரன் ஆகியோா் விவசாயிகளுக்கு வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்தும், பூச்சிநோய் தாக்குதல் மற்றும் அவற்றை தடுக்கும் முறைகள் குறித்தும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலும் தொழில்நுட்பங்களை எடுத்துரைத்தனா்.
உதவி விதைச் சான்று அலுவலா் சிவகுமாா் முதல்வரின் மன்னுயிா் காத்து மண்ணுயிா் காப்போம் திட்டம், தேசிய வேளாண் வளா்ச்சி திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் (நெல், பயறு வகைகள்), மண் வளத்தை காக்க பசுந்தாள் உர விதைகள் பயன்படுத்துதல் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து பயிற்சி அளித்தாா். மேலும், நடப்பு வேளாண் நிதியாண்டுக்கான திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயனடைய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டாா்.
ஆத்மா திட்ட செயல்பாடுகள் குறித்து வட்டார தொழில்நுட்ப மேலாளா் கங்காதரன் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினாா். இந்தப் பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனா்.