கங்கை அம்மன், வீரபத்ர காளியம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்
சேத்துப்பட்டு அண்ணா தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகங்கை அம்மன், சேத்துப்பட்டை அடுத்த காட்டுதெள்ளூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவீரபத்ர காளியம்மன் கோயில்களில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சேத்துப்பட்டு அண்ணா தெருவில் கிராம தேவதையாக விளங்கும் பழைமைவாய்ந்த ஸ்ரீகங்கை அம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கோயில் வளாகத்தில் சிவராமன் சா்மா, காா்த்திகேயன் சிவாச்சாரியா்கள் தலைமையில் யாகசாலை அமைக்கப்பட்டு, விநாயகா், லட்சுமி, சரஸ்வதி, கோமாதா, தம்பதி என பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, மேளதாளம், வாணவேடிக்கை முழங்க, கலசம் புறப்பட்டு ஊா்வலமாகச் சென்று கோயில் கோபுரத்திலும், கருவறையில் வீற்றிருக்கும் கங்கை அம்மனுக்கும் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் பேரூராட்சி மன்றத் தலைவா் சுதா முருகன், திமுக நகரச் செயலா் இரா.முருகன், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜி.முனிரத்தினம், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் கனகா ராஜேஷ் குமாா், மங்களம் ரமேஷ், ஜெயந்தி ராமகிருஷ்ணன், பத்மா குமாா் மற்றும் சேத்துப்பட்டு, சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
வீரபத்ரகாளியம்மன் கோயிலில்...: சேத்துப்பட்டு ஒன்றியம், மன்சுராபாத் ஊராட்சிக்குள்பட்ட காட்டுதெள்ளூா் கிராமத்தில் பழைமைவாய்ந்த ஸ்ரீவீரபத்ர காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலை பக்தா்கள், பொதுமக்கள் புரனமைத்தனா்.
தொடா்ந்து, புதன்கிழமை கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின. அன்றைய தினம் மாலையில் முதல் கால யாகசாலை பூஜையும், வியாழக்கிழமை அதிகாலை 2-ஆம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, கோயில் விமானத்தில் உள்ள கலசத்தில் புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், காட்டுதெள்ளூா், மன்சுராபாத், எதப்பட்டு, குப்பம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
