செய்திகள் :

30 ஆண்டுகளுக்கு முன் 30 உயிர்கள்! சாலையோர சவக் கிணறுகளும் அரசு சுற்றறிக்கைகளும்...

post image

சாத்தான்குளம் அருகே சாலையோர கிணற்றில் வேன் விழுந்து 5 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தடுப்பு ஏற்பாடுகள் தொடர்பான  சுற்றறிக்கையொன்றைத் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலர் அனுப்பியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள வெள்ளாளன்விளையைச் சேர்ந்தவர்கள் மோசஸ் குடும்பத்தினர். கோவை அருகே துடியலூரில் கடை வைத்து வியாபாரம் செய்துவந்தனர். சொந்த ஊரில் கிறிஸ்துவ ஆலய பிரதிஷ்டைக்காக காரில் வருகின்றனர்.

மீரான்குளம் என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரத்திலுள்ள   தடுப்புச் சுவர் இல்லாத கிணற்றுக்குள் விழுந்து மூழ்கியதில் 5 பேர் உயிரிழந்தனர். மூவர் உயிர் தப்பினர். நீர் நிரம்பியிருந்த 50 அடிக்கும் ஆழமான கிணற்றிலிருந்து வேனுடன் விழுந்து மூழ்கியவர்களை மீட்க பல மணி நேரங்களானது.

இரு நாள்கள் ஊடகங்களில் பரபரப்பு செய்தி. ஒரு நாள் நாளிதழ்களில் செய்தி. அனைவரும் அடுத்தடுத்த செய்திகளுக்குச் சென்றுவிட்டார்கள்; பாதிக்கப்பட்ட குடும்பத்தைத் தவிர. ஒட்டுமொத்தமான வாழ்க்கையையும் எதிர்காலத்துக்கான நம்பிக்கையையும் இழந்து நிற்கிறது அந்தக் குடும்பம்.

இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்குச் சுற்றறிக்கையொன்றைத் தலைமைச் செயலர் முருகானந்தம் அனுப்பியுள்ளார்.

“தமிழ்நாடு முழுவதும் நெடுஞ்சாலைகள், சாலை ஓரங்களில் தடுப்புச் சுவர் இல்லாத கிணறுகள், பெரும் பள்ளங்களை ஆய்வு செய்து கணக்கெடுக்க வேண்டும்; தெரியவந்தால் மூட வேண்டும். வாகன ஓட்டுநர்களுக்குத் தெரியும் வகையில் அறிவிப்புப் பலகைகளை வைக்க வேண்டும்.

“கிணற்றைச் சுற்றிப் பெரிய அளவில் தடுப்புச் சுவரை ஏற்படுத்த வேண்டும்; இல்லாவிட்டால் கிணறுகள் இருக்கும் இடத்தில் சாலையோரத்தில் தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும். பெரும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் கிணறுகள் இருக்கும்பட்சத்தில் அவற்றை நிரந்தரமாக மூடுவதற்கு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

அவ்வளவுதான், அரசு வேலை முடிந்தது. ஏற்கெனவே, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குச் சில லட்சங்கள் இழப்பீடும் அறிவித்தாகிவிட்டது. தலைவர்கள் சிலர் நேரில் சென்று பார்த்தும் ஆறுதல் தெரிவித்துவிட்டனர். ஆனால், இந்த சாலையோர தடுப்புச் சுவரில்லா கிணறுகள்...? மீண்டும் விபத்துகள் நடைபெறும், மீண்டும் சிலர் சாவார்கள்; மீண்டும் எல்லா நடைமுறைகளும் தொடரும்.

சரியாக 30 ஆண்டுகளுக்கு முன், 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி, பெரியார் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே இதேபோன்ற விபத்து நேர்ந்தது. இதேபோல சாலையோரக் கிணற்றுக்குள் பாய்ந்தது வேனோ, காரோ அல்ல, ஆள்களை ஏற்றிச் சென்ற லாரி! இறந்தவர்களோ கொஞ்ச நஞ்சமல்லர், 30 பேர்! அப்போதும் இதேபோல சாலையோரக் கிணறுகளுக்குத் தடுப்புச் சுவர்களை எழுப்பவும் வெள்ளை நிறத்தையடிக்கவும் அரசு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

vellakoil accident
வலியின் வரலாறு...

பழநி அருகேயுள்ள கலிக்கநாயக்கன்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளர்கள் இவர்கள். கொடுமுடியில் காவிரியாற்றில் தீர்த்தம் எடுத்துக்கொண்டு, பழநி முருகன் கோவிலுக்குச் சென்று வழிபடுவது இவர்களுடைய வழக்கம். முந்தைய நாள் இரவு ஒரு லாரியில் புறப்பட்டனர். வெள்ளக்கோவில் அருகே மாந்தபுரம் என்ற இடத்தில் அதிகாலை 3.20 மணியளவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரத்தில் இருந்த கிணற்றுக்குள் தலைகீழாகப் புகுந்துவிட்டது.

இறைக்க இறைக்க ஊறிக் கொண்டிருந்த இந்தக் கிணற்றின் ஆழம் 60 அடிகளுக்கும் மேலே. 50 அடிக்கும் அதிகமாகத் தண்ணீர் இருந்தது. தப்பிய ஓட்டுநர், அருகேயிருந்த தேநீர்க் கடையில் தகவலைச் சொல்லிவிட்டு வெள்ளக்கோவில் காவல்நிலையத்தில் சரணடைந்துவிட்டார்.

கிணற்றுக்குள் விழுந்த லாரியிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களும் அருகேயுள்ள கிராம மக்களும் சேர்ந்து லாரியுடன் கிணற்றுக்குள் மூழ்கியவர்களை மீட்க உதவினர். லாரியில் 89 பேர் இருந்திருக்கின்றனர்; 59 பேர் உயிருடன் மீண்டனர்.

மாவட்ட ஆட்சியராக இருந்த என்.எஸ். பழனியப்பன், கோவை சரக டி.ஐ.ஜி. விபாகர் சர்மா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. ராமகிருஷ்ணன், பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள் என அதிகாலையிலேயே அனைவரும் சம்பவ இடத்துக்கு வந்துவிட்டனர்.

கிணற்றில் வற்றாத தண்ணீர். காலை 7 மணியிலிருந்து 4 மோட்டார்கள் வைத்து இறைத்துக் கொண்டிருந்தபோதும், இறைக்கும் வேகத்தைவிட அதிகமாக தண்ணீர் ஊறியதால் மீட்புப் பணி பெரிதும் பாதிக்கப்பட்டது. மாலை 4 மணிக்குத்தான், கிட்டத்தட்ட 12 மணி நேரத்துக்குப் பிறகு, கிணற்றுக்குள் லாரி கிடப்பதே கண்ணுக்குத் தட்டுப்பட்டது, முதல் உடல் மாலை 5 மணிக்கு வெளியே எடுக்கப்பட்டது.

கிணற்றுக்குள் லாரிக்குக் கீழே சிக்கிக் கிடந்த ஒவ்வொரு சடலமும் மீட்கப்பட்டு, கயிறு கட்டி மேலே இழுக்கப்படும்போது, வெளித்தெரியும்போது, கிணற்றைச் சுற்றி நின்றுகொண்டிருந்த உறவினர்களும் பார்வையாளர்களும் எழுப்பிய ஓலமும் அழுகுரலும் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் நினைவில் ஒலித்துக்கொண்டிருக்கிறது (இப்படியொரு துயரமான காட்சியைக் காணும் கெடுவாய்ப்பு எதிரிகளுக்கேகூட நேரிடக் கூடாது). மறுநாள் அதிகாலை 4 மணிவாக்கில்தான் கடைசி உடல் மீட்கப்பட்டது. மொத்தம் 30 பேர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்.

அன்றைய பொருளாதார நிலவரப்படி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 ஆயிரமும் பலத்த காயமுற்றோருக்குத் தலா ரூ. 5 ஆயிரமும் சாதாரண காயமுற்றோருக்கு தலா ரூ. 2,500-மும் நிதியுதவி வழங்க அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்தார்.

அப்போதும் உடனடியாக, மாநிலம் முழுவதும் சாலையோரங்களிலுள்ள  கிணறுகளுக்கெல்லாம் தடுப்புச் சுவர்கள் கட்ட வேண்டும்; வாகன ஓட்டுநர்களுக்குப் பளிச்செனத் தெரியும்படியாக வெள்ளையடிக்க வேண்டும் என்று (ஆணையா, சுற்றறிக்கையா என நினைவில்லை) அரசு அறிவித்தது. மாவட்டங்களில் தடுப்புச் சுவர்கள் கட்டுவதற்கான உத்தரவை ஆட்சியர்கள் பிறப்பித்தனர்.

இப்போதும் சாத்தான்குளத்தில் சாலையோரக் கிணற்றுக்குள் வேன் விழுந்து 5 பேர் இறந்ததும், 30 ஆண்டுகளுக்கு முன் உத்தரவு பிறப்பித்த ஒன்றைப் போன்றே,  தலைமைச் செயலர் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்.

ஆனால், இந்த 30 ஆண்டுகளில்தான் எத்தனை முறை சாலையோரக் கிணறுகளில் எத்தனை வாகனங்கள் கவிழ்ந்து விழுந்திருக்கின்றன? எத்தனை பேர் உயிரிழந்திருப்பார்கள்? அப்படியானால், அரசு அப்போது வெளியிட்ட அந்தத் தடுப்புச் சுவர் உத்தரவு அல்லது சுற்றறிக்கை? ம்.

தலைமைச் செயலர் அனுப்பிய சுற்றறிக்கையை, பத்தோடு பதினோராவது வேலையாகக் கருதாமல், உண்மையிலேயே கவனத்தில் எடுத்துக்கொண்டு மாவட்ட நிர்வாகமும் நெடுஞ்சாலைத் துறையும் செயல்பட்டால் - மிக மிக எளிது - மூன்றே மாதங்களில் தமிழ்நாட்டில் சாலையோரங்களில் தடுப்புச் சுவர் இல்லா கிணறுகளே இல்லை என்ற நிலையை ஏற்படுத்திவிட முடியும்.

அரசு நிர்வாகத்தின் ஆதார நிலையிலுள்ள எந்தவொரு கிராம நிர்வாக அலுவலருக்கும் தெரியாமல் சாலையோரங்களில் தடுப்புச் சுவரற்ற கிணறுகள் இருக்க முடியாது. நெடுஞ்சாலைத் துறையிலுள்ள சாலைப் பணியாளர்களுக்கும் கண்டிப்பாகத் தெரியும். இல்லாவிட்டாலும் ஒரே வாரத்தில் இந்தக் கணக்கெடுப்பை – கண்டுபிடிப்பை முடித்துவிட முடியும். இரு தரப்பினரும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஏதேனும் விடுபட்டிருந்தாலும் தெரிந்துவிடும்.

தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கிணறுகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டியதும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கிணற்றுச் சுவரைக் கட்டி முடித்துவிட்டார்களா? என்று உறுதிப்படுத்திக் கொள்வதும்தான் மீதி வேலை. மேலும், இனிமேல் வருங்காலங்களில் சாலையோர வயல்களில், தோட்டங்களில் அல்லது பிற பயன்பாட்டுக்குத் தோண்டப்படும் கிணறுகளுக்குக் கட்டாயம் தடுப்புச் சுவர் எழுப்பப்பட வேண்டும் என்பதை உறுதி செய்வதுடன்,  இவற்றுக்கு சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலரையும் பொறுப்பாக்கினால் நூறே நாள்களில் பிரச்சினை நிரந்தரமாகத் தீர்க்கப்பட்டுவிடும்.

அல்லாமல் செயற்படுத்தும் திட்டவட்டமான நோக்கமின்றி வெறும் சுற்றறிக்கை  என்பதுடன் முடிந்தால்... விரைவில் இன்னோர் இடத்தில் சாலையோரக் கிணற்றுக்குள் ஏதேனும் வாகனம் பாயும்; உயிர்கள் பலியாகும். எல்லாமும் எப்போதும்போல தொடரும். இந்த விபத்துக்குப் பிறகேனும் தடுப்புச் சுவர் இல்லா சாலையோரக் கிணறுகளே இல்லை என்ற நிலை எட்டப்படட்டும். இதுவே இதுவரை இவ்வாறு உயிரிழந்தவர்களுக்குச் செலுத்தக் கூடிய நியாயமான அஞ்சலியாகவும் இருக்கும்!

போா்களின் போக்கை மாற்றும் ‘ட்ரோன்’ ஆயுதங்கள்! 4 நாள் சண்டைக்கு ரூ. 15,000 கோடி செலவு!

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சமீபத்திய பதற்றத்தின்போது இரு தரப்பிலும் எல்லைக்கு அப்பால் இலக்கு வைக்க பரஸ்பரம் பயன்படுத்தப்பட்ட முக்கிய ஆயுதங்களில் ஒன்றாக ட்ரோன்கள் விளங்கின. துல்லிய தாக்குதலுக்கு மறுஉத... மேலும் பார்க்க

உப்பை குறைத்தால் உயிா் காக்கலாம்!

இந்தியாவில் நான்கில் ஒருவருக்கு உயா் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதாக மருத்துவ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும், கடந்த சில ஆண்டுகளில் மட்டும் உயா் ரத்த அழுத்ததத்துக்கு ஆளாகும் இளைஞா்கள், பதின் ... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள்! முழு விவரம்!

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்துள்ளார்.பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கை... மேலும் பார்க்க

கராச்சியில் நேரு, அயூப் கையெழுத்திட்ட சிந்து நதி உடன்பாடு! நேருவை வரவேற்ற லட்சம் பேர்!

பாகிஸ்தானுக்குத் தற்போது இக்கட்டானதொரு சூழ்நிலையை ஏற்படுத்தும் விதத்தில் இந்திய அரசு நிறுத்திவைத்துள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற சிந்து நதி நீர் உடன்பாட்டில் கையெழுத்திட்டவர்கள் இந்தியாவின் முதல் பிரதமர் ... மேலும் பார்க்க