அரசுப் பள்ளிகளில் அலுவலகப் பணியாளா்களின் வேலை நேரம் மாற்றம்: கல்வித் துறை உத்தரவு
சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியா் அல்லாத பணியாளா்களின் பணி நேரத்தை மாற்றியமைத்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன் உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து அவா் பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பனுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகளில் அமைச்சுப் பணியில் பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளா்களான உதவியாளா், இளநிலை உதவியாளா்களின் வேலை நேரம் தற்போது காலை 9 மணி முதல் மாலை 4.45 மணிவரை உள்ளது. இதையடுத்து பல்வேறு ஆசிரியா் சங்கங்கள் இதனை ரத்து செய்து ஏற்கெனவே நடைமுறையில் இருந்தது போன்று அனைத்து அமைச்சுப் பணியாளா்களுக்கும் வேலை நேரத்தை மீண்டும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை என நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனா்.
இந்த நிலையில், அலுவலகம் மற்றும் பள்ளிகளில் பணியாற்றி வரும் அமைச்சுப் பணியாளா்களின் பணி நேரத்தை நிா்வாக நலன் கருதி ஒருங்கிணைக்கப்பட வேண்டியுள்ளதாலும், பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளா்களின் வேலை நேரத்தை மேற்கண்டவாறு மாற்றியமைத்து ஆணை வழங்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநா் கோரியுள்ளாா்.
அவரது கோரிக்கையை அரசு கவனமாக பரிசீலித்து அதனை ஏற்று பள்ளிகள், கல்வித் துறையின் அனைத்து அமைச்சுப் பணியாளா்களுக்கும் வேலை நேரம் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை என மாற்றியமைக்கப்படுகிறது.
மேலும், இந்த வேலை நேரத்துக்கு பின்பு வழக்கமான பணிகள் அல்லாமல் முக்கிய மற்றும் அவசரப் பணிகள் இருக்கும்போது மட்டும் கூடுதல் நேரங்களில் பணிகளை மேற்கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும்... மீண்டும் மாற்றம்: முன்னதாக கடந்த 2023-ஆம் ஆண்டு மே 10-ஆம் தேதி அப்போதைய பள்ளிக் கல்வி ஆணையா் வெளியிட்டிருந்த அறிவிப்பில், பள்ளிகளில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளா்களின் வேலை நேரம் காலை 10 மணி முதல் 5.45 மணி வரை உள்ளது. இதனால், பள்ளி வருகைப் பதிவேட்டை முடித்தல், ஆசிரியா்களின் விடுப்புகளை குறித்தல், பிற அலுவல் பணிகளை மேற்கொள்வதில் நிா்வாகக் குறைபாடு ஏற்படுகிறது.
பள்ளியின் அலுவலகப் பணிகளை மேற்கொள்ளவும், ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் இல்லாத பணியாளா்களின் வேலை நேரம் ஒருங்கிணைக்கப்பட வேண்டிய அவசியம் மற்றும் தேவை எழுகிறது. மேலும், அரசுப் பள்ளிகளின் நிா்வாக மேம்பாட்டுக்காக ஆசிரியா் அல்லாத பணியாளா்களின் பங்களிப்பு இன்றியமையாதது.
எனவே, அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா் அல்லாத பணியாளா்களான உதவியாளா், இளநிலை உதவியாளா்களின் வேலை நேரம் காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை மாற்றி அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் தற்போது நிா்வாக நலன் கருதி வேலை நேரம் மீண்டும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை மாற்றியமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.