கூலித் தொழிலாளி கொலை சம்பவம்: மற்றவா்களையும் கைது செய்யக் கோரி கிராம மக்கள் காத்...
`5 வருடங்களில் 10 லட்சம் சாமானிய வணிகர்கள் காணாமல் போய்விட்டனர்!' - ஏ.எம்.விக்கிரமராஜா சொல்வதென்ன?
கரூர், மதுரை சாலையில் உள்ள கரூர் மாவட்ட நெல், அரிசி மொத்த வியாபாரிகள் சங்க கொடியேற்று விழா மற்றும் வணிகர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அகில இந்திய வணிகர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``எதிர்வரும் மே 5-ம் தேதி அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் 42-வது மாநில மாநாடு சென்னை அருகே உள்ள மதுராந்தகத்தில் நடைபெறுகிறது. இதில், 5 லட்சம் உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். கரூர் மாவட்டத்திலிருந்து 5,000 உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். இது தொடர்பான ஆலோசனை கூட்டம் கரூர் மாவட்டத்தில் நடைபெற்றது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் சட்டத்திருத்தம் கொண்டு வந்திருப்பதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதேபோல, சிறு வணிகர்களை ஆன்லைன் வர்த்தகம் மிகவும் அச்சுறுத்தி வருகிறது. இதனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 10 லட்சம் சாமானிய வணிகர்கள் தொழில் செய்ய முடியாமல் வெளியேறி விட்டார்கள். எனவே, சாமானிய வணிகர்களைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ளாட்சி நகராட்சி பகுதிகளில் கடைகளை இடித்து புதிதாக கட்டி வாடகைக்கு விடும்பொழுது, மீண்டும் அதே வியாபாரிகளுக்கு கடைகளை வாடகைக்கு விடுவது தொடர்பாக தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் நேருவை சந்தித்து மனு அளித்துள்ளோம். தமிழகத்தில் பல்வேறுவிதமான வரிச் சுமைகளை வணிகர்கள் பாதிக்கும் வகையில் அரசு விதித்து வருகிறது. எனவே, தமிழக முதலமைச்சர் இதனை முறைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் அரசு வரிப்பணத்தில் இனாம் பொருட்கள் வழங்குவதை நிறுத்திவிட்டு, தரமான குடிநீர் குண்டு குழியும் இல்லாத சாலைகளை அமைப்பதற்கு அரசு கவனம் செலுத்த வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இனாம் அறிவிப்புகளை தேர்தல் அறிக்கையில் அறிவிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். இனாம் வழங்குவதில் போட்டி போடுவதை விட்டுவிட்டு மக்களுக்கு சேவை செய்வதில் அரசியல் கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும். உள்நாட்டு வர்த்தகர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்கி ஒற்றை சாளர முறையில் லைசென்ஸ் வழங்க வேண்டும். இதனால், லஞ்ச லாவண்யம் குறையும். ஆன்லைன் வர்த்தகத்தை உள்நாட்டு வர்த்தகர்கள் மட்டுமே மேற்கொள்ளும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். சுங்கச்சாவடிகள் கட்டணத்தை உயர்த்துவதால், வியாபாரிகள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். சுங்கவரி அதிகரிப்பை மாநில, மத்திய அரசுகள் கைவிட வேண்டும். இதே நிலை நீடித்தால் தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் இரவு 11 மணி வரை மட்டுமே வர்த்தக கடைகள் இயங்குவதற்கு காவல்துறை சார்பில் அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், 24 மணி நேரமும் ஆன்லைன் வர்த்தகம் இயங்கி வருகிறது. வெளிநாட்டு வர்த்தக ஆன்லைன் நிறுவனங்களை தடை செய்து உள்நாட்டு வர்த்தகர்களுக்கு தொழில் மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். இது தொடர்பாக, எதிர்வரும் மே 5-ம் தேதி நடைபெறும் அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் மாநில மாநாட்டில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும்” என்றார்.