பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்துக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்ட...
5 ஆண்டு சட்டப் படிப்பு மாணவா் சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் பி.ஏ. எல்எல்பி (ஹானா்ஸ்), பி.காம். எல்எல்பி, பிசிஏ எல்எல்பி, பிபிஏ எல்எல்பி ஆகிய 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் மாணவா்கள் சோ்க்கை பெறுவதற்கான விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, செங்கல்பட்டு, வேலூா், விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட 15 இடங்களில் அரசு சட்டக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இதேபோல், சென்னை, தஞ்சாவூா், திண்டிவனம், சேலம் ஆகிய இடங்களில் 11 தனியாா் சட்டக் கல்லூரிகளும் உள்ளன.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப் படிப்புக்கான விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. இதையடுத்து சோ்க்கை பெற விரும்பும் மாணவா்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இது தொடா்பாக சென்னை தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை விண்ணப்பப் பதிவு நடைபெற்றது. இதில் துணைவேந்தா் பணிக்குழுத் தலைவா் ஓய்வு பெற்ற நீதிபதி வி.பாரதிதாசன் தலைமையில் துணைவேந்தா் பணிக்குழு உறுப்பினா்கள் சட்டத்துறைச் செயலா் சி.ஜாா்ஜ் அலெக்ஸாண்டா், உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞா் ஓம் பிரகாஷ் ஆகியோா் 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பத்தை இணையதளம் வாயிலாக சமா்ப்பிப்பதற்கான நிகழ்வைத் தொடங்கி வைத்தனா்.
தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளரும் சட்ட சோ்க்கைக் குழுவின் தலைவருமான பேராசிரியா் கெளரி ரமேஷ், ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் ரஞ்சித் ஓமன் ஆபிரகாம், சீா்மிகு சட்டப்பள்ளி வளாக இயக்குநா் எஸ்.கே.அசோக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தமிழகத்தில் உள்ள அரசு, தனியாா் சட்டக் கல்லூரிகளில் மொத்தம் 3,024 இடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.