53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் சோவியத் கால விண்கலம்!
53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் கால விண்கலம் விரைவில் பூமியில் விழும் என எதிர்பார்க்கபடுகிறது.
சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பனிப்போர் நிலவிய காலத்தில், 1972-ம் ஆண்டு காஸ்மோஸ் 482 எனும் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. சூரியனை அடுத்து இரண்டாவதாகவுள்ள வெள்ளிக்கோளை அடையும் நோக்கில் விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்கலமானது தொழில்நுட்பக் கோளாறினால் அதன் இலக்கை அடையாமல் தோல்வியடைந்தது.
இவ்வாறு, விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடையும் கோள்கள் பெரும்பாலும் ஒரு சில ஆண்டுகளில் பூமியில் வந்து விழுந்து விடும் எனக் கூறப்படுகிறது. ஆனால், இந்த விண்கலமானது சுமார் 1 மீட்டர் சுற்றளவில் மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளதால் கடந்த 53 ஆண்டுகளாக விண்வெளியில் வட்டமடித்து வந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வெறும் 500 கிலோ எடையுள்ள இந்த விண்கலமானது வெள்ளிக்கோளில் நிலவும் கரியமில வாயு (கார்பன் டை ஆக்ஸைட்) நிரம்பிய அடர்த்தியான வளிமண்டலத்தில் தரையிறங்கும் நேர்த்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதினால், பூமியில் விழும்போது மிகப் பெரியளவிலான பாதிப்புகள் இருக்காது எனக் கருதப்படுகிறது.
மேலும், இந்த விண்கலத்திலுள்ள பாராசூட் அமைப்பு இத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது செயல்படுமா என்று சந்தேகிக்கப்படும் நிலையில் அதன் மீது அமைக்கப்பட்டுள்ள வெப்பக் கவசம் பாதிக்கப்பட்டிருந்தால் பூமியில் விழும் போது தீப்பிடித்து எரிந்து விடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், பிற விண்கலங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறியதான இது பூமியில் விழுவதினால் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனெனில், இது வெறும் ஒர் சிறிய ரக விண்ணக்கல்லை போன்றே பூமி வந்தடையும் எனக் கூறப்படுகிறது.
வரும் மே.10 ஆம் தேதிக்குள் பூமியில் இந்த விண்கலம் விழும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வட அல்லது தென் துருவங்களின் ஏதேனும் ஓர் பகுதியில் இது விழக்கூடும் எனவும் பூமியின் பெரும்பாலான பகுதி நீரால் நிரம்பியுள்ளதால், அந்த விண்கலம் கடலில் விழுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளதாக ஆய்வாளர்கள் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இந்திய யூடியூபர்களுக்கு ரூ. 21,000 கோடி!