6 மாத கண்காணிப்பு; சிக்கிய அஸ்ஸாம் பெண் அதிகாரி: ரெய்டில் ரூ.2 கோடி தங்கம், பணம் பறிமுதல்!
அஸ்ஸாம் சிவில் சர்வீஸ் பிரிவில் அதிகாரியாக இருப்பவர் நுபுர் போரா. தற்போது சர்க்கிள் அதிகாரியாக இருக்கும் நுபுர் போரா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக முதல்வர் அலுவலகத்திற்கு வந்த புகாரை தொடர்ந்து அவரது கவுகாத்தி இல்லத்தில் முதல்வரின் சிறப்பு லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் திடீரென ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் ரூ.92 லட்சம் ரொக்க பணம், ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தவிர நுபுர் போராவின் வாடகை வீட்டில் நடந்த ரெய்டில் ரூ.10 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அஸ்ஸாமின் கோலகட் பகுதியை சேர்ந்த நுபுர் போரா கடந்த 2019ம் ஆண்டு அஸ்ஸாம் சிவில் சர்வீஸில் இணைந்தார். தற்போது கம்ருப் மாவட்டத்தில் சர்க்கிள் அதிகாரியாக பணியாற்றி வரும் நுபுர் போரா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக முதல்வர் அலுவலகத்திற்கு வந்த புகாரை தொடர்ந்து 6 மாதங்களாக அவர் கண்காணிக்கப்பட்டதாக மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,''சர்ச்சைக்குறிய நிலப் பிரச்னையில் நுபுர் போரா சிக்கியதை தொடர்ந்து 6 மாதங்களாக அவரை கண்காணித்து வந்தோம்" என்றார்.
அவர் பார்படா வருவாய் சர்க்கிளில் பணியில் இருந்தபோது பணத்திற்காக இந்துக்களின் நிலத்தை சந்தேகத்திற்கு இடமானவர்களுக்கு இடமாற்றம் செய்து கொடுத்தார். எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் வருவாய் மண்டலத்தில் இது போன்ற ஊழல் பரவலாக இருக்கிறது. நுபுர் போராவின் கூட்டாளியாக கருதப்படும் சுரஜித் என்பவர் வீடுகளிலும் ரெய்டு நடத்தப்பட்டது. நுபுர் போராவின் உதவியோடு சுரஜித் அளவுக்கு அதிகமாக நிலம் வாங்கி குவித்து இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி கலிதா கூறுகையில், ''விசாரணை நடந்து வருகிறது. நுபுர் போராவிற்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் வந்திருக்கிறது. மேலும் தங்கம், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம்'' என்று தெரிவித்தார்.
யார் இந்த நுபுர் போரா?
அஸ்ஸாமின் கோலகட் பகுதியில் 1989ம் ஆண்டு பிறந்த நுபுர் போரா தனது கல்லூரி படிப்பை கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் முடித்தார். அவர் அஸ்ஸாம் சிவில் சர்வீஸில் சேருவதற்கு முன்பு ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஒன்றில் நுபுர் போரா பேராசிரியராக இருந்தார். 2019ம் ஆண்டில் இருந்து 2023ம் ஆண்டு வரை உதவி கமிஷனராக பணியாற்றினார். அதன் பிறகு 2023ம் ஆண்டு சர்க்கிள் அதிகாரியாக பார்பெடா என்ற இடத்தில் நியமிக்கப்பட்டார். அங்கிருந்து கம்ருப் பகுதி சர்க்கிள் அதிகாரியாக தற்போது நியமிக்கப்பட்டார்.
அவர் வருவாய்த்துறையில் நியமிக்கப்பட்ட பிறகு வருமானத்திற்கு அதிகமாக சொத்து குதித்ததோடு நிலங்கள், வீடுகளை வாங்கி குவித்ததாக மேலிடத்திற்கு வந்த தகவலை தொடர்ந்து இப்போது சிக்கி இருக்கிறார். இந்துக்களின் நிலத்தை முஸ்லிம்களுக்கு மாற்றிக்கொடுத்ததாக வந்த குற்றச்சாட்டை தொடர்ந்து கடந்த மாதம் 27ம் தேதி மாநில அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாக புதிய முடிவு எடுக்கப்பட்டது. இதன் படி ஒரு மதத்தை சேர்ந்தவர் மற்றொரு மதத்தை சேர்ந்தவருக்கு நிலத்தை விற்பனை செய்வதாக இருந்தால் அதற்கு சிறப்பு பிரிவின் ஒப்புதல் மற்றும் பாதுகாப்பு சான்றிதழ் பெறுவது என்று அந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முக்தி சங்க்ராம் சமிதி கட்சியை எம்எல்ஏ அகில் கோகோய் அதிகாரி நுபுர் போரா குறித்து கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிலத்தையும் மாற்றிக்கொடுக்க நுபுர் போரா தனித்தனியாக கட்டணம் நிர்ணயித்து இருப்பதாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.