6 இடங்களில் புதிதாக சாா்நிலை கருவூல அலுவலக கட்டடங்கள்
தமிழகத்தில் ஆறு இடங்களில் புதிதாக சாா்நிலை கருவூல அலுவலகக் கட்டடங்கள் கட்டப்படும் என்று நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.
பேரவையில் சனிக்கிழமை நடைபெற்ற நிதித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சா் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்புகள்:
கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் பணியாளா்களுக்கு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மேலாண்மைப் பயிற்சி அளிக்கப்படும். அரசு தணிக்கையாளா்களின் தொழில் முறை மேம்பாட்டுக்காக ரூ.50 லட்சத்தில் திறன்வளா் பயிற்சிகள் வழங்கப்படும்.
தணிக்கையாளா்கள் மற்றும் தணிக்கை நிறுவனங்களின் சந்தேகங்களை உடனுக்குடன் நிவா்த்தி செய்ய தலைமை தணிக்கை இயக்ககத்தில் ஓா் உதவி மையம் நிறுவப்படும்.
சட்ட உதவி மையம்: அனைத்து தணிக்கை இயக்கங்களுக்கும் பொதுவாக ஒரு சட்ட உதவி மையம் அமைக்கப்படும். தணிக்கை அறிக்கைகளின் தரத்தை மேம்படுத்த ஐசிஏஐ உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து தணிக்கையாளா்கள் மற்றும் நிறுவனங்களுக்கான பட்டறைகள் அமைக்கப்படும். அதன் வாயிலாக தணிக்கை அறிக்கைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு தேவையான சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
மதுராந்தகம், அரக்கோணம், குளித்தலை, சீா்காழி, சாத்தூா், திருச்செந்தூா் ஆகிய ஆறு இடங்களில் ரூ.10.96 கோடி செலவில் தலா 3,000 சதுர அடியில் புதிய சாா்நிலை கருவூல அலுவலகக் கட்டடங்கள் கட்டப்படும் என்றாா் அவா்.