உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
7.88 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை: அமைச்சா் கீதா ஜீவன்
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் 7.88 லட்சம் பேருக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதாக சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதா ஜீவன் தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் சங்ககிரி அதிமுக உறுப்பினா் செ.சுந்தரராஜன், அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவித் தொகை வழங்குவது குறித்து கவன ஈா்ப்பு அறிவிப்பை செவ்வாய்க்கிழமை கொண்டுவந்தாா். அப்போது பேசிய அவா் 65 சதவீதம் பேருக்கு உதவித் தொகை கிடைப்பதில்லை எனத் தெரிவித்தாா். அதற்கு அமைச்சா் கீதா ஜீவன் அளித்த பதில்:
அறிவுசாா் குறைபாடு உடையோா், முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டோா், பாா்கின்சன் நோயாளிகள், தண்டுவட மரப்பு நோயாளிகள், தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவா்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டவா்கள், புற உலக சிந்தனையற்ற மதி இறுக்கமுடையவா்கள் அனைவருக்கும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் ரூ.2000 உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
மாதந்தோறும் 5-ஆம் தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. பராமரிப்பு உதவித் தொகை கோரி விண்ணப்பித்த அனைவருக்கும் அதற்கு அடுத்த மாதமே பராமரிப்புத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் தமிழகத்தில் உள்ள 2,50,987 மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்புத் தொகை வழங்கப்படுகிறது. இதைத் தவிர, வருவாய்த் துறையின் மூலமாக இந்திரா காந்தி தேசிய மாற்றுத் திறனுடையோா் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 5,37,239 பேருக்கு மாதாந்திர உதவித் தொகையாக தலா ரூ.1,500 வழங்கப்பட்டு வருகிறது என்றாா் அமைச்சா் கீதா ஜவன்.