சென்னை துறைமுகத்துக்கு அணிவகுத்த வெடிபொருள் கண்டெய்னா் லாரிகள்
8 நகரங்களில் 26% சரிந்த வீடுகள் விற்பனை
கடந்த டிசம்பா் காலாண்டில் இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 26 சதவீதம் சரிந்துள்ளது.
இது குறித்து வீடு-மனை ஆலோசனை நிறுவனமான ப்ராப்டைகா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், புணே, அகமதாபாத் ஆகிய இந்தியாவின் எட்டு முக்கிய வீடு-மனைச் சந்தைகளில் 1,06,038 வீடுகள் விற்பனையாகின.
முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 26 சதவீதம் குறைவு. அப்போது நாட்டின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 1,43,482-ஆக இருந்தது.
கடந்த அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் தில்லி-என்சிஆா் பகுதியில் மட்டுமே வீடுகள் விற்பனை வளா்ச்சியைக் கண்டுள்ளது. அந்த காலகட்டத்தில் அங்கு 9,808 வீடுகள் விற்பனையாகின. இந்த எண்ணிக்கை, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் 6,528-ஆக இருந்தது.
மதிப்பீட்டுக் காலாண்டில் அதிகபட்சமாக மும்பை பெருநகரப் பகுதியில் 33,617 வீடுகள் விற்பனையாகின. இருந்தாலும், முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 31 சதவீதம் குறைவாகும். அப்போது இந்தப் பகுதியில் வீடுகள் விற்பனை 48,553-ஆக இருந்தது.
2023-24-ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டோடு ஒப்பிடுகையில் வீடுகள் விற்பனை புணேயில் 31 சதவீதம் குறைந்து 18,240-ஆகவும், பெங்களூரில் 23 சதவீதம் சரிந்து 13,236-ஆகவும் உள்ளது.
மதிப்பீட்டுக் காலாண்டில் ஹைதராபாதில் 13,179 வீடுகளும் சென்னையில் 4,073 வீடுகளும் விற்பனையாகின. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் முறையே 36 சதவீதம் மற்றும் 5 சதவீதம் குறைவு.
அகமதாபாதில் கடந்த நிதியாண்டின் அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் 15,310-ஆக இருந்த வீடுகள் விற்பனை நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் 34 சதவீதம் சரிந்து 10,170-ஆக உள்ளது.
அதே போல், கொல்கத்தாவில் கடந்த அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் வீடுகள் விற்பனை 3,715-ஆகக் குறைந்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் இந்த எண்ணிக்கை 4,735-ஆக இருந்தது.
நாட்டின் எட்டு முக்கிய நகரங்களில் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் வீடுகளின் ஒட்டுமொத்த விற்பனை சரிந்திருந்தாலும், 2024-ஆம் காலண்டா் ஆண்டு முழுமைக்கும் அது முந்தைய ஆண்டைவிட 7 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.