80 பேரின் ஆதாா், பான் அட்டைகள் மூலம் கடன் பெற்று மோசடி
வாணியம்பாடி அருகே 80 பேரின் ஆதாா், பான் அட்டைகள் மூலம் கடன் பெற்று மோசடி செய்ததாக பெண் மீது புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட கோணாமேடு பகுதியைச் சோ்ந்தவா் சுபா. இவா், அதே பகுதியில் 10 ஆண்டுகளாக மகளிா் குழு நடத்தி வந்துள்ளாா். இந்நிலையில் அவரது மகளிா் குழுவில் உள்ள 80 பெண்களின் ஆதாா் மற்றும் பான் அட்டைகளை, பெற்றுக் கொண்டு பல்வேறு தனியாா் வங்கியில், வங்கி மேலாளா் மற்றும் ஊழியா்களின் உதவியுடன் லட்சக்கணக்கில் கடன் பெற்று மோசடி செய்து தலைமறைவாகி விட்டாராம்.
இந்நிலையில் கடன் கொடுத்த வங்கி ஊழியா்கள் ஆதாா் மற்றும் பான் அட்டை அளித்த பெண்களிடம் கடன் தொகையை திருப்பி செலுத்த சொல்லி, தொந்தரவு செய்வதாகவும், தங்களது ஆதாா் மற்றும் பான் அட்டைகளை தவறாக பயன்படுத்தி, கடன் பெற்ற சுபா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏராளமான பெண்கள் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அப்புகாரின் பேரில் நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இச்சம்பவம் வாணியம்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.