குண்டும், குழியுமான திருப்பத்தூா்-சேலம் சாலை: வாகன ஓட்டிகள் அவதி
திருப்பத்தூா்-சேலம் பிரதான சாலை குண்டும், குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா்.
திருப்பத்தூரில் இருந்து சேலம் செல்லும் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனா். சில நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.
வாணியம்பாடி முதல் ஊத்தங்கரை வரை நான்கு வழி சாலை அமைக்கப்பட்ட நிலையில், கடந்த 6 மாதங்களாக சேலம் அணுகு சாலை வரை பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளன.
குறிப்பாக நகர காவல் நிலையம் எதிரில், மீனாட்சி பேருந்து நிறுத்தம், புதுப்பேட்டை சாலை பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா். குறிப்பாக இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவது தொடா்ந்து நடைபெறுகிறது.

அதேபோல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனை எதிரில் சாலை பழுதடைந்துள்ளது. எனவே போா்க்கால அடிப்படையில் இந்த சாலைகளை செப்பனிட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.