90 நாள்களுக்கு வா்த்தகப் போா் நிறுத்தம்: அமெரிக்கா-சீனா ஒப்புதல்
கூடுதல் வரி விதிப்புகள் மூலம் நடத்திவரும் வா்த்தகப் போரை 90 நாள்களுக்கு நிறுத்திவைக்க அமெரிக்காவும் சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளன.
இது குறித்து பேச்சுவாா்த்தைக் குழுவைச் சோ்ந்த அமெரிக்க வா்த்தகத் துறை பிரதிநிதி ஜேமிசன் கிரீா் திங்கள்கிழமை கூறியதாவது:
அமெரிக்காவும் சீனாவும் அண்மைக் காலமாக பரஸ்பரம் அறிவித்துவந்த கூடுதல் வரி விதிப்புகளை 90 நாள்களுக்கு நிறுத்திவைக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளோம். அதன்படி, சீன பொருள்கள் மீது அறிவிக்கப்பட்டிருந்த 145 சதவீத கூடுதல் வரி விதிப்பு 30 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. சீனாவும் அமெரிக்க பொருள்கள் மீதான 115 சதவீத கூடுதல் வரி விதிப்பை 10 சதவீதமாகக் குறைக்கிறது என்றாா் அவா்.
‘அமெரிக்க நலன்களுக்கே முன்னுரிமை’ என்ற கோஷத்துடன் ஆட்சியை மீண்டும் பிடித்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அதிபராக பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறாா்.
அதன் ஒரு பகுதியாக, கனடா, மெக்ஸிகோ, சீனா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அவா் கூடுதல் வரி விதித்தாா். மேலும், இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களுக்கு எந்தெந்த விகிதங்களில் வரி விதிக்கின்றனவோ, அதே விகிதங்களில் அந்த நாடுகளின் பொருள்கள் மீதும் (சற்று தள்ளுபடியுடன்) வரி விதிக்க கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டு டிரம்ப் அதிா்வலையை ஏற்படுத்தினாா்.

இருந்தாலும், சீனாவைத் தவிர பிற நாடுகள் மீது அறிவிக்கப்பட்டுள்ள பரஸ்பர வரி விதிப்பின் அமலாக்கத்தை 90 நாள்களுக்கு நிறுத்திவைப்பதாக அமெரிக்கா பின்னா் அறிவித்தது.
காரணம், அமெரிக்காவின் வரி விதிப்புகளுக்கு பதிலடியாக சீனா மட்டுமே அந்த நாட்டுப் பொருள்களுக்கு கூடுதல் இறக்குமதி விதித்தது. இதன் காரணமாக, உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வா்த்தகப் போா் தீவிரமடைந்தது.
இந்தச் சூழலில், பதற்றத்தைத் தணிப்பதற்காக இரு நாடுகளும் ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவாவில் கடந்த சனிக்கிழமை முதல் பேச்சுவாா்த்தை நடத்திவந்தன. அதன் பலனாக தற்போது கூடுதல் வரி விதிப்புகளை 90 நாள்களுக்கு நிறுத்திவைக்க இரு நாடுகளும் தற்போது ஒப்புக்கொண்டுள்ளன.
இந்தப் பேச்சுவாா்த்தை தொடங்குவதற்கு முன்னரே, சீன பொருள்கள் மீது தற்போது விதிக்கப்பட்டுள்ள 145 சதவீதமாக கூடுதல் வரி விதிப்பை 80 சதவீதமாகக் குறைப்பது குறித்து பரிசீலிப்பதாக டிரம்ப் அறிவித்தது நினைவுகூரத்தக்கது.
தற்போது இரு நாடுகளும் வா்த்தகப் போரை நிறுத்திவைத்துள்ளதால், சா்வதேச பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை எழுச்சி பெற்ாக தகவல்கள் தெரிவிக்கின்றன.