ஆபரேஷன் சிந்தூரில் முகாம் அழிப்பு உண்மைதான்! - ஜெய்ஷ்-யைத் தொடர்ந்து ஒப்புக்கொண்...
96 பேருக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
பெரம்பலூரில் சீா்மரபினா் நலவாரிய உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற
விழாவுக்கு, மிகப் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை ஆணையா் வ. கலையரசி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி முன்னிலை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சீா்மரபினா் நலவாரிய உறுப்பினா்கள் 800 பேருக்கு அடையாள அட்டைகளும், 96 பேருக்கு ரூ. 10,22,760 மதிப்பில் நலத்திட்ட உதவிகளும் அளித்த பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் பேசியது:
சீா்மரபினா் நல வாரியத்தில் 1 லட்சம் உறுப்பினா்களை சோ்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இதுவரை சுமாா் 97 ஆயிரம் உறுப்பினா்களை சோ்த்துள்ளோம். அதில், இம் மாவட்டத்தில் 800 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படுகிறது. கரூா், பெரம்பலூா், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஊராளிக் கவுண்டா்கள் உள்ளனா். இவா்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலிலிருந்து சீா்மரபினராக மாற்றுவதற்கான முயற்சியை, நீலகிரி தொகுதி மக்களவை உறுப்பினா் ஆ. ராசா மேற்கொண்டாா்.
சீா்மரபினா் நலவாரிய உறுப்பினா்களை, அரசு நலத் திட்டங்களுக்கு இணையவழியில் பதிவு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.
தொடா்ந்து, நீலகிரி தொகுதி மக்களவை உறுப்பினா் ஆ. ராசா பேசியது:
கல்வியும், அதிகாரமும் தான் உங்கள் குழந்தைகளைக் காப்பாற்றும். ஒரு காலத்தில் அறிவுமட்டுமே இந்த உலகத்தை ஆட்சி செய்யும். அதை நோக்கி உங்கள் பயணத்தை வைத்துக்கொள்ளுங்கள். அனைவருக்கும் கல்வி எனும் இலக்கை நோக்கி திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்றாா் அவா்.
இவ் விழாவில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, சிறுபான்மையினா் நல வாரிய துணைத்தலைவா் ராசா அருண்மொழி, உறுப்பினா் செ. கணேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் (பொ) வி. வாசுதேவன், நிா்வாக அலுவலா் பா. குணசேகா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.