திருச்சியில் மின்சாரம் பாய்ந்து இரு மின் ஊழியா்கள் உயிரிழப்பு
Ambedkar: "சாவர்க்கரையும் காங்கிரஸ் அவமதித்தது; என் பேச்சை..." - அமித் ஷா தரும் விளக்கம் என்ன?
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``இந்த காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என அவரின் பெயரைக் கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்குப் பகவானின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்கு (காங்கிரஸ்) சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்." என்று பேசியது நேற்று முதல் விவாதப்பொருளாக இருக்கிறது.
இதில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ``அம்பேத்கரை அவமதித்ததற்காக அமித் ஷா-வை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்." என்று கூறியிருக்கிறார். மறுபக்கம், ``அம்பேத்கரை நாங்கள் மதிக்கிறோம். காங்கிரஸ் தான் இவ்வளவு காலம் அம்பேத்கரை அவமதித்திருக்கிறது'' என பிரதமர் மோடி சாடிவருகிறார். இந்த நிலையில், அமித் ஷா தனது பேச்சு குறித்து காங்கிரஸைச் சாடி விளக்கமளித்திருக்கிறார்.
டெல்லியில் இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, ``நேற்று முதல் காங்கிரஸ் உண்மைகளைத் திரித்து வருவதைக் கண்டிக்கிறேன். அம்பேத்கர், இட ஒதுக்கீடு, அரசியல் சாசனத்துக்கு எதிரானது காங்கிரஸ். சாவர்க்கரையும் காங்கிரஸ் அவமதித்திருக்கிறது. எமெர்ஜென்சியின் மூலம் அரசியலமைப்பின் விழுமியங்களை அவமதித்தனர். நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, அம்பேத்கரைக் காங்கிரஸ் எப்படி எதிர்த்தது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
அவர் இறந்த பிறகும் காங்கிரஸ் அவரைக் கேலிசெய்ய முயன்றது. பாரத ரத்னா விருது பொறுத்தவரை, காங்கிரஸ் தலைவர்கள் தங்களுக்குப் பலமுறை பாரத ரத்னா வழங்கிக்கொண்டனர். 1955-ல் நேரு தனக்கு பாரத ரத்னா கொடுத்துக்கொண்டார். 1971-ல் இந்திரா தனக்கு பாரத ரத்னா கொடுத்துக்கொண்டார். ஆனால், 1990-ல் தான் அம்பேத்கருக்குப் பாரத ரத்னா கிடைத்தது. அதுவும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லாதபோது, பா.ஜ.க ஆதரவு ஆட்சியில்.
முன்பு அவர்கள் பிரதமர் மோடியின் திரிபுபடுத்தப்பட்ட அறிக்கைகளைப் பகிரங்கப்படுத்தினர். தேர்தல் நடந்துகொண்டிருந்த போது, எனது பேச்சுக்கள் AI மூலம் திரிபுபடுத்தப்பட்டது. அதேபோல இன்றும் எனது பேச்சைத் திரித்து முன்வைக்கிறார்கள். எனது முழு பேச்சையும் பொதுமக்கள் முன் வைக்குமாறு ஊடகங்களைக் கேட்டுக் கொள்கிறேன். காங்கிரஸின் இந்த கேவலமான முயற்சியை நீங்கள் ஆதரித்திருக்கக் கூடாது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிடம் சொல்ல விரும்புகிறேன்.
ராகுல் காந்தியின் அழுத்தத்தால் நீங்களும் இவ்வாறு பேசுகிறீர்கள் என்பது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. மேலும், கார்கே என்னை ராஜினாமா செய்ய வேண்டும் என்கிறார். அது அவருக்கு மகிழ்ச்சியைத் தரும் என்றால் நான் ராஜினாமா செய்திருப்பேன். ஆனால், அது அவரின் பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டு வராது. ஏனெனில், அடுத்த 15 வருடங்களுக்கும் அவர் அதே இடத்தில்தான் (எதிர்க்கட்சி) இருப்பார்." என்று விமர்சித்தார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...