மதுரையில் இருந்து அமெரிக்கா பறக்கும் பட்டுக்கிளி - கைவினைப் பொருள்கள் தயாரிப்பில...
AMMA: மலையாள சினிமா நடிகர் சங்கத்தில் இணைய ஸ்வேதா மேனன் அழைப்பு; நடிகை பாவனா பதில் என்ன?
அம்மா (AMMA) அமைப்பு
மலையாள சினிமா நடிகர்கள் சங்கமான அம்மா அமைப்பு தொடங்கப்பட்டு 31 ஆண்டுகள் ஆகின்றன. இத்தனை ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக அம்மா அமைப்பின் தலைவராக பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெற்ற மலையாள நடிகர்சங்க தேர்தலில் நடிகை ஸ்வேதா மேனன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பொதுச்செயலாளராக குக்கூ பரமேஸ்வரனும், பொருளாளராக உண்ணி சிவபால், துணைத்தலைவராக லட்சுமி பிரியா, இணைச் செயலாளராக அன்ஷிபா ஹசன் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட நடிகைக்கு நீதி
மலையாளா சினிமா நடிகர் சங்கத்தின் அதிகாரம் மிக்க பதவிகளில் நடிகைகள் பதவி ஏற்றிருப்பதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
புதிய நிர்வாக குழுவினர் இப்போதே சில நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். நடிகை பாலியல் வழக்கில் நடிகர் திலீப், பல்சர் சுனி உள்ளிட்டவர்கள் மீது வழக்கு ஒன்று நடந்து வருகிறது.
'நடிகை பாலியல் வழக்கில் மிகவும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இனியும் தாமதம் ஏற்படக்கூடாது. உண்மை உடனே வெளியே வரவேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் நடிகர் சங்கத்தில் இணைய வேண்டும். பாதிக்கப்பட்ட நடிகைக்கு நீதி கிடைக்க வேண்டும்' என நடிகை ஸ்வேதா மேனன் கூறியிருந்தார்.
ஹேமா கமிட்டி அறிக்கை
இதற்கிடையே படபிடிப்பு தளங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை அளித்ததை தொடர்ந்து, மலையாள சினிமா கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் கேரள அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.

நடிகை பாவனா சொன்ன பதில்
இந்த நிலையில், 'அம்மா அமைப்பின் அதிகார பதவியில் பெண்கள் இடம்பிடித்திருக்கும் நிலையில் நிர்வாகக்குழுவுக்கு ஒத்துழைப்பீர்களா?' என நடிகை பாவனாவிடம் கொச்சியில் வைத்து செய்தியாளர்கள் கருத்து கேட்டனர்.
அதற்கு பதிலளித்து பேசிய பாவனா, "நான் இப்போது அம்மா அமைப்பில் உறுப்பினராக இல்லை. அம்மா அமைப்பின் தலைமை பொறுப்பில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி எனக்குத் தெரியாது. அதற்கான சூழ்நிலை ஏற்படும் போது அது குறித்து பேசலாம்" என பதிலளித்தார்.
ஸ்வேதா மேனன் முயற்சி
2018-ம் ஆண்டு நடிகை பாவனா உள்ளிட்ட 4 நடிகைகள் மலையாள நடிகர் சங்க உறுப்பினர் பதவியிலிருந்து விலகினர். அந்த சமயத்தில் நடிகர் இன்னசெண்ட் தலைவராக இருந்தார்.
அதன் பின்னர் நடிகர் மோகன்லால் தலைவர் ஆனார். அப்போதெல்லாம் பாவனா உள்ளிட்ட 4 நடிகைகளையும் மீண்டும் நடிகர் சங்கத்தில் இணைக்க எந்த முயற்சியும் நடக்கவில்லை.

இப்போது தலைவராக உள்ள நடிகை ஸ்வேதா மேனன் தனது முதல் செய்தியாளர்கள் சந்திப்பிலேயே ராஜிநாமா செய்தவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும், அவர்கள் விரும்பினால் தானே நேரில் சென்று பேசலாம் எனவும் ஸ்வேதா மேனன் கூறியுள்ளார். நடிகை ஸ்வேதா மேனனின் அழைப்பை பாவனா ஏற்றுக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.