ரஷியாவில் புற்றுநோய் தடுப்பு மருந்து தயார்! இலவசமாக வழங்கவும் திட்டம்
BB Tamil 8 Day 72: விபத்தில் சிக்கிய ராணவ்; சவுந்தர்யாவின் குரூரம் - `மனிதாபிமானிகள்' அருண், பவித்ரா
‘ராணவ்விற்கு உண்மையிலேயே அடிபட்டதா அல்லது அவர் ஆடியது நாடகமா என்கிற சர்சசை இந்த எபிசோடின் ஹைலைட். இந்தச் சம்பவத்தின் மூலம் ஜெப்ரி, சவுந்தர்யா போன்றோரின் குரூரமான முகங்கள் அம்பலமானது. ஓர் அசந்தர்ப்பமான சூழலிலும் மனிதாபிமானற்று சிந்திப்பவர்களின் நடத்தை என்பது மிக மோசமானது.
‘பேசியே கொல்கிறார்’ என்று சொல்லப்பட்ட அருண்தான், ராணவ்விற்கு உதவுவதற்காக உடனே ஓடி வருகிறார். ஆனால் அந்தச் சம்பவம் உண்மை என்பதைத் தெரிந்த பிறகும் ‘நான் ஸாரி கேட்க வரல’ என்று சவுந்தர்யா சொல்கிறார். அழகுக்குப் பின்னால் ஆபத்து இருக்கும் என்பது பழமொழி. ‘க்யூட்னஸ்’-க்குப் பின்னால் குரூரம் இருக்கும் என்பது புதுமொழி.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 72
ராணவ்விற்கு நிகழ்ந்த ligament tear (தசைநார் கிழிவு) சம்பவம்தான் இன்றைய நாளின் முக்கியமான டிராமா. எனவே அதைப் பற்றி முதலில் விரிவாகப் பார்த்து விடுவோம். கீழே விழுந்து தோள்பட்டை வலியால் துடிக்கும் ராணவ்வைப் பார்த்து அன்ஷிதா, ஜெப்ரி, சவுந்தர்யா உள்ளிட்டோர் ‘அவன் நடிக்கிறான்’ என்கிற மாதிரி கிண்டல் செய்தார்கள்.
பிஸிக்கல் ஆட்டத்தில் இது நேரும்தான். என்றாலும் ராணவ்வின் பாதிப்பிற்கு காரணமாக இருந்த ஜெப்ரியோ, சற்று கூட குற்றவுணர்வோ, பரிதாபமோ இன்றி “அவனை என்ன ஆஸ்பிட்டலுக்கா தூக்கிட்டுப் போயிருக்காங்க?” என்று அமர்த்தலாக சொல்கிறார். அடிபட்டது உண்மை என்று தெரிந்த பிறகும் கூட “விசிட்டிங் ஹவர்ஸ் முடியப் போகுது.. சீக்கிரம் போய் பாருங்க” என்று மற்றவர்களிடம் ஏளனமாகச் சொல்கிறார். எத்தனை மனிதாபிமானமற்ற வார்த்தைகள்?! மற்றவர்களின் அனுதாபத்தைத் துளிகூட கூச்சமின்றி பெற்றுக் கொள்கிற ஜெப்ரி, அதனால் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் வாங்கிக் கொண்ட ஜெப்ரி, அதே மாதிரியான அனுதாபத்தை மற்றவர்களுக்குத் துளிகூட தராமல் இருப்பது எத்தனை பெரிய முரண்?
‘ராணவ் நடிக்கிறான்’ என்று ஆரம்பத்தில் கிண்டலடித்தவர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விட்டார் சவுந்தர்யா. அடிபட்டது உண்மை என்பது தெரிந்தும் ‘மூன்று வாரத்திற்கு ராணவ்வால் விளையாட முடியாது’ என்கிற நிதர்சனம் புரிந்தும் கூட, தான் பேசிய கிண்டலுக்கு பொறுப்பேற்காமல் “நான் ஸாரி கேட்க வரலை.. இது அவனோட தப்பு. நான் என்ன பண்ண முடியும்? இவங்களும் ராணவ்வோட ஆர்வக்கோளாறு பத்தி முன்ன பேசினவங்கதானே. இப்ப மட்டும் நல்லவங்களா ஆயிட்டாங்களா?” என்றெல்லாம் விதண்டாவாதம் புரிகிறார். இது சிறுபிள்ளைத்தனமான சிந்தனை மட்டுமல்ல, ஆபத்தான சிந்தனையும் கூட.
ராணவ்வை கிள்ளுக்கீரையாக நடத்தும் வீடு:
ராணவ் அடிபட்டு விழுந்தாலும்கூட அந்தச் சூழலில் போதுமான பதட்டமோ அனுதாபமோ யாருக்கும் வரவில்லை. அருண் மட்டுமே பதட்டத்துடன் ஓடி வருகிறார். மற்ற எல்லோருமே இதைப் பற்றிய அக்கறையின்றி கிண்டலடிக்கிறார்கள். அதையும் விட ஆட்டத்தில் மட்டும்தான் கவனம் செலுத்துகிறார்கள்.
ராணவ் என்றாலே அந்த வீட்டில் ஏறத்தாழ அனைவருக்குமே கிள்ளுக்கீரை என்பதை பார்த்து வருகிறோம். ஏன், போட்டியாளர்களைச் சமமாக அணுக வேண்டிய விஜய் சேதுபதி கூட ராணவ்வை வைத்து சமயங்களில் கிண்டல் செய்வதை பார்க்கிறோம். பல விஷயங்களில் மந்தபுத்தியாக செயல்படுகிற சவுந்தர்யா கூட ராணவ்வை ‘சுத்த வேஸ்ட், மக்கு.. ஒண்ணுக்கும் உதவாதவன்’ என்றெல்லாம் ஆங்காரத்துடன் பழி சொல்வதையும் பார்க்கிறோம்.
அப்படியொரு நிலைமையை ஏற்படுத்தியதில் ராணவ்விற்கும் பங்குண்டு என்பது உண்மை. ஆனால் இது ஒரு பகுதி உண்மை மட்டுமே. சிலர் இயல்பிலேயே சில விஷயங்களில் மந்தமாக இருப்பார்கள். அதற்காக அவர்களை Taken for granted ஆக எடுத்துக் கொண்டு எள்ளி நகையாடி விட முடியுமா? அவர்களை அனுசரணையுடன் நடத்துவதுதானே மனிதாபிமானம்? இதே ராணவ்தான், ஜெப்ரிக்கு தரப்பட்ட பாஸ் பற்றிய அநீதியை முதன்முதலில் சபையில் துணிச்சலாகச் சொன்னவர். நேற்றைய எபிசோடில் கூட சர்க்கரைப் பற்றாக்குறை பற்றிய உரையாடலின்போது ‘அடுத்த சீசனுக்கும் சேர்த்து வெக்கறாங்க போல!’ என்று கிண்டலடித்தார். எத்தனை அருமையான நகைச்சுவையுணர்ச்சி
‘அவன் தெரியணும்ன்னு நிறைய விஷயங்களைப் பண்றான்’ என்று சவுந்தர்யா குற்றம் சாட்டிய போது வலியால் இருந்தாலும்கூட ராணவ்விற்கு கோபம் வந்து ‘அப்படி நான் என்ன பண்ணேன்..?’ என்று ஆட்சேபிக்கிறார். தன்னை நிரூபிக்க வேண்டுமென்பதற்காக அவர் எங்காவது ஆர்வக்கோளாறாக நடந்திருக்கலாம். Prank செய்திருக்கலாம். ஆனால் ‘தான் தெரிய வேண்டும்’ என்பதற்காகத்தானே மற்றவர்களும் பல்வேறு விதமான கவனஈர்ப்புகளைச் இந்த ஆட்டத்தில் செய்கிறார்கள்? ‘க்யூட்னஸ்’ என்கிற பெயரில் சவுந்தர்யா செய்வதெல்லாம் இயல்பா என்ன? பார்வையாளர்களை தக்க வைத்துக் கொள்ளும் டிராமாதானே? இதுதானே இந்த ஆட்டத்தின் சர்வைவல் காரணங்களில் ஒன்று?! எனில் ராணவ் செய்வதை மட்டும் கிண்டலடிப்பதற்கு காரணம், அவர் எல்லோர் பார்வையிலும் ஏளனமாக பார்க்கப்படுவதுதான்.
தேள் கொட்டினாலும் உதவுவதுதான் மனிதம்
சரி, ராணவ் நிறைய விஷயங்களில் டிராமா செய்பவர் என்றே ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம். ஒருவன் நூறு முறை கீழே விழுந்து நடிக்கிறான். மற்றவர்களை எரிச்சலூட்டுகிறான். ‘புலி வருது.. புலி வருது..’ என்று டிராமா போடுகிறான். ஆனால் அவன் நூற்றி ஓராவது முறை கீழே விழுந்து அடிபட்டது போல் ‘தெரிந்தாலும்’ உடனே பதறிச் சென்று அந்த விபத்தின் நம்பகத்தன்மையைப் பார்ப்பதுதான் அடிப்படையான மனிதாபிமானம். அதுதான் முதிர்ச்சி. மாறாக ‘அவன் எப்பவும் இப்படித்தான் நடிப்பான்’ என்று அலட்சியமாக இருப்பது சராசரிகளின் மனநிலை. ஒருவர் சராசரியாக இருக்கிறாரா அல்லது முதிர்ச்சியாக இருக்கிறாரா என்பதை ராணவ் விபத்து விஷயத்தில் பிக் பாஸ் வீடு காட்டிக் கொடுத்து விட்டது. ஒருவர் வலியால் துடிக்கும் போது சந்தேகத்தின் பலனை உடனே தந்து அவருக்கு ஆதரவாக நிற்பதுதான் முதலில் செய்ய வேண்டியது.
இந்த விஷயம் தொடர்பாக ஒரு நீதிக்கதையை நினைவுகூருவோம். உங்களில் பலரும் அறிந்திருக்கக்கூடிய கதைதான். ஒரு தேள் தண்ணீரில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தது. அந்த வழியாக வந்த ஒரு துறவி அந்தத் தேளை கையினால் தூக்கி காப்பாற்ற முயல்கிறார். தேள் அவருடைய கையில் கொட்டுகிறது. தன்னிச்சையான வலியுடன் தேளை தவற விடுகிறார் துறவி. என்றாலும் மீண்டும் தேளைக் காப்பாற்ற முயல்கிறார். மீண்டும் கொட்டு வாங்கித் தவற விடுகிறார்.
அந்த வழியாக வந்த இன்னொரு நபர், இதைப் பார்த்து விட்டு “ஏன் சாமி.. அதான் தேளு கொட்டுதுன்னு தெரியுதுல்ல.. பேசாம விட்டுட்டுப் போங்களேன்” என்று ஆதங்கத்துடன் சொல்ல, பதிலுக்கு துறவி சொல்வதுதான் ஹைலைட். “கொட்டுவது தேளின் குணம். அது அப்படித்தான் எதிர்வினையாற்றும். அதன் இயல்பு அது. ஆனால் காப்பாற்றுவது மனிதனின் குணம். குறைந்த அறிவு கொண்ட தேளே தனது இயல்புபடிதான் செயல்படுகிறது. ஆனால் ஆறறறிவு கொண்ட மனிதனான நான் என்னுடைய இயல்பின்படிதானே நடக்க முடியும்?!”
இதே நீதியை ராணவ் விஷயத்திற்கும் பொருத்திப் பார்க்கலாம். என்னதான் நாடகமாடுபவர் என்று ராணவ் மீது பொதுவான கேலி இருந்தாலும் ஒருவர் வலியால் துடிக்கும் போது சந்தேகத்தின் பலனை உடனே தந்து ஓடிச் சென்று பார்ப்பதுதான் அடிப்படையான மனிதாபிமானம். நாம் துறவியாக உயர்ந்த நிலைக்கு செல்லத் தேவையில்லை. ஆனால் அடிப்படை மனிதாபமானத்தைக் கூட இழந்து நிற்கும் போட்டி மனப்பான்மை நிறைந்த மனிதர்களாக மாறி விட்டோம் என்பதை பிக் பாஸ் ஆட்டம் அம்பலப்படுத்தியிருக்கிறது. அன்ஷிதாவாவது ‘அவன் நடிக்கறான்’ என்று முதலில் கிண்டலடித்ததற்காக பிறகு மனமார வருந்தினார். ஆனால் உண்மையை அறிந்த பிறகும் கூட சவுந்தர்யாவும் ஜெப்ரியும் இந்த விஷயத்தில் நடந்து கொண்டது மனிதாபிமானமே அற்ற செயல். இந்த விஷயம் விசாரணை நாளில் அழுத்தமாக கண்டிக்கப்பட வேண்டும்.
மனிதாபிமானத்துடன் செயல்பட்ட அருண், பவித்ரா
“அவன் நடிக்கறான்னு நான் நம்பல. இருந்தாலும் மத்தவங்க அந்த மாதிரி சொன்ன போது அவனுக்கு நிச்சயம் வலிச்சிருக்கும். அவனுக்கு ஆறுதலா இருக்கட்டும், மத்தவங்களும் மன்னிப்பு கேட்ட மாதிரி இருக்கும்ன்னுதான் நான் முதல்ல எழுந்து மன்னிப்பு கேட்டேன்” என்று சொன்ன பவித்ராவின் குணம் பாராட்டத்தக்கது. உடனே ஓடிச் சென்று பார்த்து உதவியதோடு மட்டுமல்லாமல், ‘வன்முறையா ஆடாதீங்க’ என்பதை தொடர்ந்து வலியுறுத்தும் அருண் இந்த விஷயத்தில் போற்றத் தகுந்தவர்.
எது எப்படியோ, ராணவ்விற்கு நடந்த இந்த விஷயமும் அவருக்கு அனுகூலமாக மாறலாம். எல்லோராலும் ஏளனமாக பார்க்கப்படும் ராணவ் மீது பெரும்பான்மையான பார்வையாளர்களுக்கு ஏற்கெனவே அனுதாபம் ஏற்பட்டிருக்கிறது. பாதிக்கப்படுபவர்களின் நிற்பதுதான் அறமும் கூட. அந்த வகையில் இந்தச் சம்பவம் ராணவ்விற்கு கூடுதல் மைலேஜை தந்து அவரை மேலும் சில வாரங்களுக்கு தக்க வைக்கலாம். அவரைக் கிண்டல் செய்தவர்கள், அவருக்கு முன்பே வெளியேறினால் அது கவித்துவமான நீதியாக கூட அமையக்கூடும்.
வேறென்ன? பொருட்கள் பற்றாக்குறை ஏற்படும் போதுதான் சின்னச் சின்ன விஷயங்கள் கூட பூதாகரமாக மாறுகின்றன. ‘சுகர்’ என்பது சர்வதேச பிரச்சினையாக இருக்கும் போது அதே விஷயம் பிக் பாஸ் விட்டில் சர்க்கரைப் பஞ்சாயத்தாக மாறியிருக்கிறது. ‘போட்டியாளராக இருக்கும் போது கூடுதல் சர்க்கரையை எதிர்பார்த்த பவித்ரா, கிச்சன் இன்சார்ஜாக மாறிய பிறகு கறாரான ரேஷனைக் கடைப்பிடிக்கிறார்’ என்று ஜாக்குலின் விமர்சனம் செய்தார். ‘கிச்சன் இன்சார்ஜ்ன்னா பொருட்களைக் கம்மியா கொடுக்கணும்னு அர்த்தமா.. இன்னாடா. அவார்டா கொடுக்கப் போறாங்க?” என்று கிண்டடிலத்தார் சவுந்தர்யா.
மீண்டும் சொதப்பிய முத்துவின் ஸ்ட்ராட்டஜி
தனக்கு ஜாக்குலின் காட்டிய பாரபட்சம் பற்றி ரயான் ஆவேசமாக கேட்க இருவருக்கும் முட்டிக் கொண்டது. ஆக ‘கோவா கேங்’ என்பது முற்றிலும் சுக்குநுாறாக உடைந்தது நல்ல விஷயம். தனித்தனியாக ஆடும் போது ஒருவரை துல்லியமாக மதிப்பிட முடியும்.
இந்த வார வீக்லி டாஸ்க் என்பது உடல்பலத்தைக் கோருவது. வீட்டில் 13 நபர்கள் என்னும் போது அணி பிரிப்பதில் பிக் பாஸ் வைத்த விதி என்பது அநியாயமானது. மூன்று நபர்கள் கொண்ட அணிகள் மூன்றும் இரண்டு நபர்கள் கொண்ட அணிகள் இரண்டும் என்று பங்கு வைத்தார். மூன்று நபர்கள் அணியுடன் இரண்டு நபர்கள் எப்படி மோத முடியும்? சரிசமமான வலிமை என்பது இருக்காது. இதுவே அநீதிதான். ஆனால் பிக் பாஸ் என்பது இப்படியான கோக்குமாக்கான விதிகளைக் கொண்டதுதான். போட்டியாளர்களுக்குள் சிக்கலை ஏற்படுத்துவதுதான் இதன் பிரதான விதி.
அணி 1-ல் ரயான், ரஞ்சித், ஜாக்குலின். அணி 2-ல், விஷால், சவுந்தர்யா, அருண். அணி 3-ல் பவித்ரா, அன்ஷிதா, ஜெப்ரி. இது மூன்று நபர்களைக் கொண்ட அணி. இரண்டு நபர்களைக் கொண்ட அணியாக ராணவ் மற்றும் மஞ்சரி கூட்டணியும் முத்து மற்றும் தீபக்கும் சேர்ந்தார்கள். 2 நபர்களைக் கொண்ட அணியாக இருந்தாலும் ராணவ்+மஞ்சரியோடு கூட்டணி உடன்பாடு செய்து கொண்டதில் முத்துவின் புத்திசாலித்தனம் வெளிப்பட்டது. மூன்றை விடவும் நான்கு என்பது அதிக எண்ணிக்கைதானே?! “முதலில் நாம் நால்வரும் இணைந்து அவர்களை தூக்குவோம். பிறகு நமக்குள் பார்த்துக் கொள்வோம்” என்று முத்து போட்ட ஐடியா என்னமோ நன்றாகத்தான் இருந்தது. ஆனால் நடைமுறையில் பயங்கரமாக சொதப்பியது.
மஞ்சரியிடம் வன்முறையைக் காட்டிய ஜெப்ரி - பதிலுக்குப் பாய்ந்த ராணவ்
ராணவ் முட்டி மோதிக் கொண்டு வந்து மஞ்சரியிடம் தந்த கற்களை பலவந்தமாகப் பிடுங்கத் துவங்கினார் ஜெப்ரி. அவர் தீபக்கிடமோ, ரஞ்சித்திடமோ அல்லது இதர பெண்களிடமோ இப்படி முரட்டுத்தனமாக ஆட மாட்டார். ஆனால் மஞ்சரி ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொள்வதாலும், மஞ்சரியின் மீது வீட்டில் பலருக்கும் விரோதம் இருப்பதாலும் அவரை ஈஸி டார்கெட்டாக வைத்து ஜெப்ரி செயல்பட்டார்.
தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த கற்கள் பறிபோனதை அறிந்த ராணவ், ஆவேசத்துடன் ஜெப்ரி அணியின் மீது பாய இருவருக்கும் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ராணவ் கீழே விழுந்து விபத்து நடந்தது. ‘அனகோண்டா மாதிரி’ பிடிச்சிட்டான்’ என்று முந்தைய டாஸ்க்கிலேயே ராணவ் மீது புகார் கூறியிருந்த ஜெப்ரி, இந்த முறை அதை எதிர்பார்த்து கூடுதல் வேகத்துடன் செயல்பட்டிருக்கலாம். இதெல்லாம் ஆட்டத்தில் நடக்கக்கூடியதுதான். ஆனால் பிறகு நடந்ததுதான் மோசம்.
ஒருவருக்கு அடிபட்ட பிறகாவது ஆட்டத்தை இவர்கள் அப்படியே நிறுத்தி விட்டு உள்ளே சென்று ராணவ்வை பார்த்திருக்கலாம். அப்போதும் கூட கல்லின் மீது குத்த வைத்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். தவறு செய்யாவிடினும், நல்லெண்ண அடிப்படையில் பவித்ரா முதல் மன்னிப்பைக் கோர, ராணவ்வை கிண்டல் செய்தவர்களும் பிறகு மன்னிப்பைக் கோரினார்கள். அது உண்மையான மன்னிப்போ அல்லது பாவனையோ, இந்தச் சமயத்தில் கருணையுடன் நடந்து கொள்வதுதான் மனிதம்.
விழுபவனுக்கு உடனே கைகொடுப்பதுதான் உதவி
இந்தச் சராசரியான எதிர்வினையையும் தாண்டி அடுத்த படிக்கு சென்றார் மஞ்சரி. ‘ஒருவருக்கு அடிபடும் போது சந்தேகத்தின் பலனை உடனே தருவதுதான் நல்லது. விசாரிக்காமல் அதைப் பற்றி யாரும் ஏளனமாக பேச வேண்டாம். இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்பது போல் அவர் சொன்ன அபிப்ராயத்தை, மன்னிப்பு கேட்டவர்கள் தவறாகப் புரிந்து கொண்டார்கள். “அப்ப நாங்க மன்னிப்பு கேட்டது பொய்யின்ற மாதிரி ஆயிடுதுல்ல?” என்று ஆத்திரப்பட்டார்கள்.
உண்மை நிலவரத்தை அறியாமல் கிண்டல் செய்து விடுவது சராசரி மனநிலை. அதையும் கூட கடந்து முதிர்ச்சியுடன் நடந்து கொள்வது மேம்பட்ட நிலை. சராசரி மனநிலை உள்ளவர்களால் இதைப் புரிந்து கொள்ள முடியாது. மஞ்சரி சொன்ன அதே விஷயத்தைத்தான் முத்துவும் வழிமொழிந்தார். ஆனால் அதை தனது பிரத்யேக பாணியில் சொன்னதும் சபை ஏற்றுக் கொண்டது. Communication Skill.
வெளியே செல்லும் போது சாலை ஓரங்களில் சிலர் சுரணையின்றி விழுந்து கிடப்பதைப் பார்க்கலாம். ‘குடிச்சுட்டு எப்படி கிடக்கறான்.. பாரேன்’ என்கிற பார்வையுடன் பலர் கடந்து செல்வதுதான் நடைமுறை. எனக்கும் அப்படித்தான் பல முறை தோன்றியிருக்கிறது. ஆனால் சில சமயங்களில் என்ன தோன்றும் என்றால் ‘ஒருவேளை அவர் குடிகாரராக அல்லாமல் ரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளால் மயங்கி விழுந்திருப்பவராக இருந்தால் என்னவாகும்? அய்யோ.. குடிகார வரிசையில் அவரையும் இணைத்து அலட்சியமாக கடந்து செல்வதின் மூலம் ஒரு சமூகமே குற்றவாளிகளின் கூடாரமாக மாறி விடுமே?’ என்று மனம் பதைபதைக்கும்.
ராணவ் விபத்தின் மூலம் கிடைத்த நீதி என்பது இதுதான். ஆயிரம் முறை தேள் கொட்டினாலும் அடிப்படையான மனிதத்தை இழக்காமல் இருப்பதுதான் முக்கியம். அதற்கு சராசரி மனநிலையிலிருந்து வெகுதூரம் கடந்து செல்ல வேண்டும்.
ராணவ் விஷயத்தில் ஹவுஸ்மேட்ஸ் நடந்துகொண்ட விதம் குறித்து உங்களின் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்