BB Tamil 8: 'இது முடிவல்ல, வெறும் ஆரம்பம்தான்' - பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் சௌந்தர்யாவின் பதிவு
கடந்த அக்டோபர் 6-ம் தேதி ஒளிப்பரப்பாகத் தொடங்கிய 'பிக் பாஸ்' சீசன் 8 நிகழ்ச்சியின் 'Bigg Boss 8 Grand Finale' நேற்று முன்தினம் ( ஜனவரி 19) இரவு நடைபெற்றது.
மொத்தம் 24 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் டாப் 5 போட்டியாளர்களாக, முத்துக்குமரன், சௌந்தர்யா, விஷால், பவித்ரா மற்றும் ரயான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் பிக்பாஸ் சீசன் 8-ன் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் முதல் இடத்தைப் பிடித்து கோப்பையைத் தட்டிச்சென்றார். இரண்டாவது இடத்தை சௌந்தர்யா பிடித்திருந்தார். இந்நிலையில் மக்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சௌந்தர்யா பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில், "நீங்கள் எனக்கு அளித்த வாக்குகளும், ஊக்களித்த வார்த்தைகளும்தான் என்னை கடினமான நாட்களில் கடந்து செல்ல வைத்தது. நீங்கள் அனைவரும் எனக்கு துணையாக நின்றிருக்கிறீர்கள், என்னை நம்பி காப்பாற்றி இருக்கிறீர்கள். உங்களில் பலர் நான் வெற்றி பெறுவதைக் காண விரும்புவதை அறிந்ததும், வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட நன்றியுணர்வும் மகிழ்ச்சியும் என் இதயத்தை நிரப்பியது.
பிக் பாஸில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது என்னுடைய சாதனை மட்டுமல்ல. இந்த வெற்றி நம் அனைவருக்குமானது. வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய @pradeepmilroy சார் @balachandran_ratnavel சார் @kriskuty சார் அவர்களுக்கும், அற்புதமான தொகுப்பாளராக இருந்த @actorvijaysethupathi சார் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பயணம் முழுவதும் எனக்கு உந்துதலாகவும், பலமாகவும் இருந்த எனது குடும்பத்திற்கு நன்றி. இது முடிவு அல்ல, இது வெறும் ஆரம்பம்தான். நீங்கள் அனைவரும் என் பக்கத்தில் இருப்பதால், உலகை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். உங்கள் அனைவரையும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து நேசிக்கிறேன்" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.