`Blood Money' கேரளா நர்ஸ் நிமிஷா பிரியாவை காப்பாற்ற ஒரே வழி! - அது என்ன?
ஏமனில் தன்னுடைய தொழில் கூட்டாளியான தலால் அப்தோ மஹ்தி என்பவரை கொலை செய்த வழக்கில், கேரள செவிலியர் நிமிஷா பிரியாவிற்கு இன்று மரண தண்டனை வழங்கப்பட இருந்தது.
ஆனால், இந்திய அரசின் தொடர் முயற்சியால் தற்போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கேரள அரசு நிமிஷா பிரியாவை மீண்டும் இந்தியாவிற்கு அழைத்து வர, கோரிக்கை வைத்து வருகிறது.
அவரை மீட்டுக்கொண்டு வர இருக்கும் ஒரே வழி, 'பிளட் மணி'.

பிளட் மணி என்றால் என்ன?
ஏமன் நாட்டில் இஸ்லாமிய ஷரியா சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டத்தின் படி, தெரியாமல் ஒரு குற்றம் நடந்துவிட்டால், பாதிக்கப்பட்ட நபரின் குடும்பம் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க சொல்லி கோரிக்கை வைக்கலாம் அல்லது நஷ்ட ஈடு கேட்கலாம்.
நஷ்ட ஈடு அதாவது பிளட் மணி பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரால் வாங்கப்பட்டு விட்டால், மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு விடும். பெரும்பாலும், குற்றவாளிக்கு மன்னிப்பும் வழங்கப்படும்.
நிமிஷா பிரியா வழக்கில் பிளட் மணி வழங்கப்படுவதன் மூலம் தான், அவரை காப்பாற்ற முடியும் என்ற உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு கூறியுள்ளது. அதனால், அதற்கான ஏற்பாடுகள் அடுத்து செய்யப்பட உள்ளது.
இந்த நடைமுறை ஏமனில் மட்டுமில்லை... சவுதி அரேபியா, பாகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது.