நெல்லை இருட்டுக்கடை உரிமையைக் கேட்டு துன்புறுத்திய கணவர்: உரிமையாளர் மகள் வரதட்ச...
Cambodia: கன்னிவெடிகளை கண்டறிந்து உயிர்களைக் காக்கும் எலி - யார் இந்த ஹீரோ?
போர்களில் விடப்பட்ட 100க்கும் மேலான கன்னிவெடிகளை கண்டுபிடித்த முதல் எலி என்ற சாதனையைப் படைத்துள்ளது, ரோனின் என்ற 5 வயதான 'ஆப்ரிக்க பெரிய பை எலி' (African Giant Pouched Rat) .
கின்னஸ் உலக சாதனைகள் கூறுவதன்படி, 2021ம் ஆண்டு முதல் கம்போடியா முழுவதும் ஆபத்தான 109 கன்னி வெடிகளையும் 15 வெடிக்காத போர் ஆயுதங்களையும் கண்டுபிடித்துள்ளது இந்த எலி.
அப்போபோ என்ற லாப நோக்கமற்ற நிறுவனம்தான் இந்த ஆண் எலிக்கு பயிற்சி அளித்துள்ளது. 30 ஆண்டுகளாக இந்த நிறுவனம் போர்களில் விடப்பட்ட கன்னிவெடிகளை எடுப்பதற்காக எலிகளை தயார்படுத்தி வருகிறது.

இந்த எலிகள், மோப்பம்பிடித்து தரையில் கிளறுவதன்மூலம் கன்னிவெடிகளைக் கண்டறிகின்றன. இப்படியாக பல வெடிக்காத வெடிகளை கண்டெடுத்து கம்போடியாவை பாதுகாப்பானதாக மாற்றுவதில் மிக முக்கியமான வேலையை ரோனின் செய்துள்ளது என்கின்றனர்.
ரோனின் குறித்து அதன் பயிற்சியாளர்கள், "அவன் கடின உழைப்பாளி, நட்புடன் பழகக்கூடியவன், ரிலாக்ஸான ஆள்" எனக் கூறியுள்ளனர்.
அப்போபோ செய்தி தொடர்பாளர் லில்லி ஷாலோம், "ரோனினின் வெற்றிகரமான கரியருக்கு காரணம் அவனது கூர்மையான கவனம் செலுத்தும் திறனும், வலுவான பணி நெறிமுறையும், பிரச்னைகளைத் தீர்ப்பதில் இருக்கும் ஆர்வமும்தான் காரணம்.

அவனுடைய புத்திசாலித்தனமும், இயல்பான ஆர்வமும் அவனுக்கு ஈடுபாட்டை வழங்குகின்றன. இதனால் கன்னிவெடிகளைக் கண்டுபிடிப்பது வேடிக்கையான விளையாட்டாக உள்ளது.
ஒவ்வொரு நாளும் புதிய சோதனைகளை எதிர்கொண்டு சாதித்துள்ளான்" எனக் கூறியுள்ளார்.
ரோனினின் சாதனைகள் எலிகளின் திறனை வெளிக்காட்டுவதாகக் கூறுகின்றனர். அப்போபோ குழுவினர், ரோனின் எங்களின் சொத்து மட்டுமல்ல, அவர் ஒரு மதிப்புமிக்க கூட்டாளி மற்றும் சக ஊழியர் எனக் கூறியுள்ளனர்.
எலி ஹீரோக்களின் வாழ்க்கை
ரோனின் போன்ற எலிகள் தினமும் 30 நிமிடம் வரைப் பணியாற்றுகின்றன. பயிற்சிக்குப் பிறகு சில ஆண்டுகள் மட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, அவற்றின் நலனைக் கருதி சில காலத்தில் ஓய்வளிக்கப்படுகின்றன.

கம்போடியா உலகிலேயே அதிகம் கன்னிவெடிகள் வைக்கப்பட்ட நாடாக உள்ளது. உள்நாட்டுப்போர் 1998ம் ஆண்டே நிறைவடைந்திருந்தாலும் 1000 சதுர கிலோமீட்டருக்கும் மேற்பட்ட பகுதிகளில் இப்போதும் கன்னிவெடிகள் இருக்கின்றன.
போர்களில் வைக்கப்பட்ட ஆயுதங்களால் 40,000க்கும் மேற்பட்ட கம்போடிய மக்கள் கை, கால்களை இழந்துள்ளனர்.
ரோனினுக்கு முன்பு மகவா என்ற மற்றொரு எலி அதிக கன்னிவெடிகளை எடுத்த சாதனையைப் படைத்திருந்தது. அதன் 5 ஆண்டு பணி காலத்தில், 79 கன்னிவெடிகளையும் 39 பிற வெடிக்கும் ஆயுதங்களையும் கண்டறிந்திருந்தது.
2022ம் ஆண்டு மரணமடைவதற்கு முன்பு PDSA விலங்கு தொண்டு நிறுவனத்தின் தைரியத்துக்கான விருதைப் பெற்றிருந்தது.