Champions Trophy: அர்ஷ்தீப் சிங்குக்கு பதில் ஹர்ஷித் ராணா - ரசிகர்கள் அதிருப்தி ஏன்?
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கான முதல் போட்டி தொடங்கியிருக்கிறது. இதில் தேர்வு செய்யப்பட்டுள்ள 11 பேர் கொண்ட அணி குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. ரசிகர்களும், கிரிக்கெட் வல்லுநர்களும் தேர்வுக்குழுவை விமர்சித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் இந்திய அணி, அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக ஹர்ஷித் ராணாவை அணியில் எடுத்ததுதான்.
ஹர்ஷித் ராணாவைவிட அனுபவம் வாய்ந்த வீரரான அர்ஷ்தீப் சிங் அமரவைக்கப்பட்டுள்ளார். கடந்த சில போட்டிகளில் ஓய்வளிக்கப்பட்டிருந்த முகமது ஷமி, பிளேயிங் லெவனுக்குத் திரும்பியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான கடந்த ஒருநாள் தொடரின் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கு அறிமுகமான ராணா, பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் ஆதரவைப் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஐபிஎல் 2024ல் கௌதம் கம்பீர் பயிற்சியாளராக செயல்பட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார் ஹர்ஷித் ராணா.
சாம்பியன்ஸ் டிராபிக்கான முதல் 15 பேர் அணியில் ராணா இடம்பெறவில்லை. ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக வெளியேறியதால் ஸ்குவாடில் சேர்க்கப்பட்டார்.
15 பேர் கொண்ட அணியில் ராணா இணைக்கப்பட்டபோதே சர்வதேச போட்டிகளில் அனுபவம் வாய்ந்த முகமது சிராஜ் சிறந்த தேர்வாக இருப்பார் என ரசிகர்கள் பகிர்ந்தனர்.
இப்போது முன்னதாக அணியில் இருந்த வீரர்களுக்கு மாற்றாக அவர் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஹர்ஷத் ராணாவுக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் குரலெழுப்புகின்றனர். இன்றைய போட்டியில் 8 ஓவர்கள் வீசி, 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.