கா்நாடகம்: ஏழை மக்களுக்கு 4.68 லட்சம் வீடுகள் ஒதுக்கீடு -சிவ்ராஜ் சிங் சௌஹான்
Champions Trophy: '750+ ஆவரேஜ் இருந்தாலும் டீம்ல இடம் கிடையாது' - சாம்பியன்ஸ் டிராபி அணி அறிவிப்பு
இங்கிலாந்துக்கு எதிரான ஓடிஐ தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடி வரும் கருண் நாயருக்கு இந்த அணியிலும் இடம் இல்லை.
இங்கிலாந்துக்கு எதிரான ஓடிஐ தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியை இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவிக்கவிருப்பதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. மதியம் 12:30 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பு என அறிவித்திருந்தார்கள். ஆனால், சொன்ன நேரத்திற்கு பத்திரிகையாளர் சந்திப்பு ஆரம்பிக்கவில்லை. பிசிசிஐயின் தலைமையகத்தில் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக அணியை இறுதி செய்யும் கடைசிக்கட்ட மீட்டிங் நடந்திருக்கிறது. அதை முடித்துவிட்டு 3 மணிக்குதான் பத்திரிகையாளர் சந்திப்பை ஆரம்பித்தார்கள். தேர்வுக்குழுத் தலைவரான அஜித் அகர்கரும் கேப்டன் ரோஹித் சர்மாவும் அணியை அறிவிக்க வந்திருக்கிறார். அஜித் அகர்கர் அணியில் இடம்பெற்றிருக்கும் வீரர்களின் பட்டியலை அறிவித்தார்.
அணி விவரம் : ரோஹித் சர்மா, கில், விராட் கோலி, ஸ்ரேயாஷ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, பும்ரா, ரிஷப் பண்ட், ஜடேஜா, ஹர்ஷித் ராணா.
பும்ரா காயமடைந்து ஓய்வில் இருக்கிறார். அவர் பிப்ரவரி முதல் வாரத்திற்குள் குணமாகிவிடுகிறார் என நம்புகிறோம். அதனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஹர்ஷித் ராணாவையும் இணைத்திருக்கிறோம் என்றார் அகர்கர்.
அவரிடம் கருண் நாயர் பற்றிய கேள்வியை முன் வைக்கையில், '750+ ஆவரேஜில் ஆடுவது அசாத்தியமானது. ஆனால், எங்களால் 15 பேரைத்தான் அணியில் எடுக்க முடியும். எல்லாரையும் எடுக்க முடியாது.' எனக் கூறினார்.
நடப்பு விஜய் ஹசாரே தொடரில் கருண் நாயர் 5 சதங்களுடன் 752 ரன்களை அடித்திருக்கிறார். 6 இன்னிங்ஸ்களில் நாட் அவுட்டாக இருந்திருக்கிறார். ஆவரேஜ் 752. ஆனாலும் அவரை அணியில் எடுக்கவில்லை.