காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!
CSK : 'டெவால்ட் ப்ரெவிஸூக்கு வாய்ப்பு கிடைக்குமா?- CSK வின் ப்ளேயிங் லெவன் எப்படி இருக்கும்?
'மும்பை vs சென்னை!'
மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையேயான போட்டி வான்கடேவில் இன்று நடக்கவிருக்கிறது. முதல் 7 போட்டிகளில் இரண்டை மட்டுமே வென்றிருக்கும் நிலையில், சென்னை அணி கட்டாயம் வென்றாக வேண்டிய போட்டி இது.

இந்தப் போட்டியில் சென்னை அணியின் ப்ளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும்? புதிதாக அணியில் இணைந்திருக்கும் டெவால்ட் ப்ரெவிஸூக்கு வாய்ப்பு கிடைக்குமா? லெவனில் இடம்பெறுவாரா?
'டெவால்ட் ப்ரெவிஸின் பார்ம்!'
டெவால்ட் ப்ரெவிஸை மெகா ஏலத்தில் எந்த அணியும் வாங்கவில்லை. இரண்டாண்டுகள் மும்பை அணிக்காக ஆடியிருந்தார். அதிரடியான வீரராக அறியப்பட்டாலும் பெரிதாக அவரை நிரூபித்துக் காண்பிக்கவில்லை. அதனால்தான் எந்த அணியும் அவரை சீண்டவில்லை. ஆனால், மெகா ஏலம் நடந்து முடிந்த பிறகு நடந்த SAT20 லீகில் மும்பை அணிக்காகவே நன்றாக ஆடியிருந்தார்.

அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் 291 ரன்களை எடுத்திருந்தார். சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் 6 வது இடத்தில் இருந்தார். ஆக, டெவால்ட் ப்ரெவிஸை இப்போது கொஞ்சம் நம்பலாம். மேலும், சிஎஸ்கேக்கு வேறு வழியும் இல்லை. மிடில் ஆர்டரில் இவரைப் போல நினைத்த மாத்திரத்தில் சிக்சர் அடிக்கக்கூடிய திறனுடைய வீரர் கட்டாயம் தேவை.
அதற்காகத்தான் அவரை மாற்று வீரராகவும் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். அப்படியிருக்க அவரை பென்ச்சில் வைத்திருந்தால் அதில் அர்த்தமே இல்லை. அதனால் மும்பைக்கு எதிரான போட்டியிலேயே டெவால்ட் ப்ரெவிஸை லெவனில் எடுக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது.
'யாருக்கு பதில் டெவால்ட் ப்ரெவிஸ்?'
டெவால்ட் ப்ரெவிஸை லெவனில் எடுக்க வேண்டுமெனில் யாரை ட்ராப் செய்ய வேண்டும் என ஒரு கேள்வி எழும். அது பெரிய சிரமமே இல்லை. நான்காவது ஓவர்சீஸ் ஸ்லாட்டுக்கு சென்னை அணிக்கு ஒரு வீரர் இன்னும் செட்டே ஆகவில்லை.

ஓவர்ட்டனை பென்ச்சில் வைத்துவிட்டு அவருக்குப் பதில் டெவால்ட் ப்ரெவிஸை இறக்கலாம். நம்பர் 4 இல் உள்ளே இறங்கி விக்கெட்டை பற்றி கவலைப்படாமல் ரிஸ்க் எடுத்து ஆடினால் அபாயகரமான வீரராக இருப்பார்.
'ராகுல் திரிபாதி ட்ராப் செய்யப்படுவாரா?'
டெவால்ட் ப்ரெவிஸ் உள்ளே வந்தால் சென்னையின் லெவனில் ஒரு மாற்றம் இருக்கும். அது இல்லாமல் இன்னொரு மாற்றம் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. ராகுல் திரிபாதி ஓப்பனிங், நம்பர் 3 என எல்லா இடங்களிலும் சொதப்பிவிட்டார். 5 போட்டிகளில் 55 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார்.

ஆக, அவர் லெவனில் இருக்க 50-50 வாய்ப்புதான் இருக்கிறது. திரிபாதி பென்ச்சுக்கு செல்லும்பட்சத்தில் புதிதாக ஒப்பந்தம் செய்திருக்கும் ஆயுஸ் மாத்ரேவை அந்த இடத்தில் இறக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், அப்படி இறக்கும்பட்சத்தில் சென்னையின் டாப் 4 இல் 3 வீரர்கள் அனுபவமற்ற வீரர்களாக இருப்பார்கள்.
அப்படியொரு காம்பினேஷனுக்கு சென்னை அணி தயாராக இருக்குமா எனத் தெரியவில்லை. இந்த சந்தேகம், ராகுல் திரிபாதிக்கு மற்றுமொரு வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கலாம்.
மாற்றங்கள் செய்ய விரும்பினால், சென்னை அணியின் லெவனில் இந்த இரண்டு மாற்றங்கள் மட்டுமே இருக்கும். அஷ்வினை கடந்தப் போட்டியில் ட்ராப் செய்துவிட்டார்கள். அஷ்வினை ட்ராப் செய்ததால் எந்த இழப்பும் இல்லை என்பதால் இந்தப் போட்டியிலும் அவரை எடுக்க வாய்ப்பில்லை.
ஓவர்டன் வீசும் அந்த இரண்டு ஓவர்களை விஜய் சங்கர், ரச்சின் ரவீந்திரா, சிவம் துபே ஆகியோரை வைத்து சமாளிக்கலாம். ஏன், டெவால்ட் ப்ரெவிஸே ஒன்றிரண்டு ஓவர்களை வீசுவார்.
இதுபோக, நீங்கள் சென்னை அணியின் லெவனில் என்னென்ன மாற்றங்கள் வேண்டுமென நினைக்கிறீர்கள்?