CT : `தொடர் நாயகன் விருதை இவருக்குத்தான் கொடுத்திருக்க வேண்டும்’ - யாரை சொல்கிறார் அஸ்வின்?
சாம்பியன்ஸ் டிராபி 8 வருடங்களுக்குப் பிறகு பல்வேறு விமர்சனங்கள், கொண்டாட்டங்கள், ஆதரவு என சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்திய அணி ஐந்தாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி, நியூசிலாந்திடம் பழைய கணக்கை தீர்த்து மூன்றாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது. நியூசிலாந்து அணி மீண்டுமொருமுறை ஐ.சி.சி கோப்பையைத் தவறவிட்டது.

இருப்பினும், நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராதான் (4 போட்டிகளில் 2 சதங்கள் உட்பட 263 ரன்கள்) தொடர் நாயகன் விருது வென்றார். இந்த நிலையில், தொடர் நாயகன் விருதை இந்திய வீரர் வருண் சக்ரவர்த்திக்குத்தான் கொடுத்திருக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.
தனது இந்தி யூடியூப் சேனலில் இது குறித்து பேசிய அஸ்வின், ``யார் என்ன கூறினாலும், என்னுடைய பார்வையில் வருண் சக்ரவர்த்திதான் இந்தத் தொடரின் நாயகன். முழு தொடரையும் வருண் விளையாடவில்லை. இருப்பினும், போட்டியில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தார். வருண் இல்லையென்றால் போட்டிகள் இன்னும் வித்தியாசமாக இருந்திருக்கும்.

ஒருவேளை நான் நடுவராக இருந்திருந்தால், தொடர் நாயகன் விருதை வருணுக்கு கொடுத்திருப்பேன். கிளென் பிலிப்ஸை அவர் ஆட்டமிழக்கச் செய்த விதத்தைப் பாருங்கள். ஸ்டம்ப்ஸை கிளென் பிலிப்ஸ் மறைக்கவில்லை. அதனால், வருண் கிரீஸுக்கு அகலமாகச் சென்று கூக்ளி வீசினார்.

என் பார்வையில் வருண்தான் தொடர் நாயகன். மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்த ஒருவருக்கு இந்த விருது கொடுத்திருக்க வேண்டும். தொடர் நாயகன் விருதுக்கு வருண் தகுதியானவர்." என்று கூறினார்.
அஸ்வின் பேச்சு குறித்து உங்களின் கருத்துகளை கமெண்ட்டில் பதிவிடவும்.