Desingu raja 2: "பூவெல்லாம் உன்வாசம் சமயத்தில் தெரியல; ஆனா, இப்போ..." - வித்யாசாகர் குறித்து எழில்
துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் போன்ற கிளாசிக் படங்களை இயக்கிய இயக்குநர் எழில், பின்பு மனம் கொத்திப்பறவை, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், வெள்ளைக்கார துரை, தேசிங்கு ராஜா போன்ற காமெடி படங்களையும் இயக்கினார்.
இந்தப் படங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. கடந்த 2013-ம் ஆண்டு வெளியான 'தேசிங்கு ராஜா' படத்தின் இரண்டாம் பாகம் தேசிங்கு ராஜா-2 உருவாகியிருக்கிறது.
இந்தப் படத்தில் நடிகர்கள் விமல், ஜனா, பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா, விஜய் டிவி புகழ், ரோபோ சங்கர், ரவி மர்யன், லொள்ளுசபா ஸ்வாமி நாதன், சிங்கம் புலி எனப் பெரும் காமெடி நடிகர் பட்டாளமே நடித்திருக்கிறது. இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார்.
ஜூலை 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
அதில் பேசிய நடிகர் விமல், ``இயக்குநர் எழில் அவர்களுடன் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னொரு படம். விலங்கு, போகுமிடம் வெகு தூரமில்லை என இரண்டு படங்களும் சீரியஸான படங்கள்.
அதிலிருந்து மனதைக் கலகலப்பாக மாற்றிய படம் தேசிங்கு ராஜா-2. இயக்குநர் எழில் அவர்களின் சிறப்புகளில் ஒன்று, எல்லோரையும் சமமாக நடத்துவார். நடிகர் ஜனா, ஷூட்டிங் முடிந்த பிறகுதான் அவர் தயாரிப்பாளர் மகன் என்பதே எல்லோருக்கும் தெரியும்.
அப்படியான நபர். இந்தப் படத்தில் புகழும் நானும் இன்ஸ்பெக்டர் ரோலில் நடித்திருக்கிறோம். எல்லோருக்கும் இந்தப் படம் பிடிக்கும். கண்டிப்பாக திரையரங்கில் பாருங்கள்" என்றார்.
அதைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் எழில், ``இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிசந்திரன், சினிமாவை நேசிக்கக் கூடிய ஒரு தயாரிப்பாளர். அவர் எனக்குக் கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி.
நிறைய படங்கள் அவர் செய்யவேண்டும். தேசிங்கு ராஜா படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் நடிகர் விமல். இந்தப் படத்துக்கும் அவர்தான் காரணமாக இருப்பார். இந்தப் படத்தில் நிறைய காமெடி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
வித்யாசாகர் சிறப்பான இசையமைப்பாளர். பூவெல்லாம் உன்வாசம் படத்துக்கான பாடலுக்காகச் சென்றபோது எனக்கு அவரின் ஆளுமையெல்லாம் தெரியாது. ஆனால், இப்போது மீண்டும் அவரிடம் சென்று அமரும் போதுதான் அவரை முழுமையாகப் புரிந்தது. இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கும்." என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...