Dhoni ஏன் தனித்துவமான கேப்டன்? - அஷ்வின் சொன்ன சுவாரஸ்ய பதில்
தலைசிறந்த கேப்டனாக புகழப்படும் எம்.எஸ்.தோனியின் எந்த பண்பு அவரை மற்ற கேப்டன்களிடமிருந்து தனித்தவராகக் காட்டுகிறது எனக் கூறியுள்ளார் ரவிசந்திரன் அஷ்வின்.
2007ல் டி20 உலகக்கோப்பை, 2011ல் ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை, 2013ல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என அனைத்து உலக கோப்பைகளையும் வென்ற கேப்டன் தோனி. தோனியின் கேப்டன்சியின் கீழ் செயல்படுவது எல்லா பௌலர்களுக்கும் விருப்பமான ஒன்று. ரவிச்சந்திரன் அஷ்வின் தோனியின் உலகக்கோப்பை படையில் இருந்திருக்கிறார்.
ஐபிஎல்லைப் பொருத்தவரையில், 2009 முதல் 2015 வரை தோனியின் தலைமையின் கீழ் ஐபிஎல்லில் விளையாடியிருக்கிறார் அஷ்வின் (Ashwin). 2010 மற்றும் 2011ல் தோனி - அஷ்வின் இணைந்து கோப்பைகளை வென்றுள்ளனர். தற்போது 2025ல் மீண்டும் தோனியும் அஷ்வினும் இணைந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடவிருக்கின்றனர்.
அடிப்படையான விஷயங்களைக் கடைப்பிடிக்கும் தோனியின் எளிமைதான் அவரை மற்ற கேப்டன்களிடமிருந்து வித்தியாசப்படுத்துவதாக அஷ்வின் கூறியுள்ளார்.
ஸ்கை ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் பாட்காஸ்டில் பேசிய அஷ்வின், "நான் என்ன நினைக்கிறேன் என்றால், அவர் (Dhoni) கிட்டத்தட்ட அனைத்து அடிப்படை விஷயங்களையும் சரியாகச் செய்துவிடுவார். பெரும்பாலான கேப்டன்கள் அடிப்படை விஷயங்களை மிஸ் செய்துவிடுவார்கள், அதனாலேயே அவர்களுக்கு போட்டி கடினமாகிவிடுகிறது" எனக் கூறியுள்ளார்.
"தோனி பந்தைக் கொடுக்கும்போதே பௌலர்களை அவர்களுக்கு ஏற்றதுபோல வீரர்களை அமைத்து, அதற்கு ஏற்றதுபோல பந்துவீச சொல்வார். அப்போது பௌளர் ஒரு லூஸ் டெலிவரி கொடுத்தால், அவரை பௌலிங் அட்டாக்கை விட்டு வெளியே எடுக்கமாட்டார். ஒரு ஓவரில் 2,3 பௌண்டரிகள் சென்றாலும் அது போட்டியில் சகஜம்தான்.
ஒருவேளை நான் புதிய பேட்ஸ்மேன் கட் அல்லது ட்ரைவ் செய்யுமாறு பந்து வீசினால், அவர் கடுப்பாவார். என்னை உடனடியாக பௌலிங் அட்டாக்கிலிருந்து விலக்குவார். இது கிரிக்கெட்டின் மிக அடிப்படையான சாராம்சம். காலப்போக்கில் மக்கள் அடிப்படை விஷயங்களை மறந்துவிட்டதாக உணர்கிறேன்"