செய்திகள் :

Dian Fossey: ஒரு ’மலை கொரில்லா’வின் சமாதியின் அருகே புதைக்கப்பட்டப் பெண்மணி - யார் இவர்?

post image

டயேன் ஃபாசி. 53 வயதில் கொலை செய்யப்பட்ட இவருடைய உடலை மலை உச்சியில் இருந்த ஒரு கொரில்லாவின் சமாதியின் அருகே புதைத்தார்கள். யார் இந்த டயேன் ஃபாசி? அவரை ஏன் கொலை செய்தார்கள்? அவருடைய உடலை ஏன் கொரில்லாவின் சமாதியின் அருகே புதைத்தார்கள்? இதன் பின்னணியில் இருக்கின்ற அந்த உண்மைக்கதை என்ன?  

அமெரிக்காவில் இருக்கின்ற சான்ஃபிரான்சிஸ்கோவில் 1932-ம் வருடம் இதே ஜனவரி மாதம் 16-ம் தேதி பிறந்தார் டயேன் ஃபாசி. அவருக்கு 6 வயதாகையில் டயேனின் பெற்றோர் விவாகரத்து செய்து பிரிந்துவிட, அம்மாவிடம் வளர ஆரம்பித்தார். வளர்ப்புத்தந்தைக்கு டயேனை பிடிக்கவே பிடிக்காது. அம்மாவோ, பெற்ற தந்தையை டயேனிடம் நெருங்கவெ விடவில்லை. பெற்றோரின் பாசத்துக்கு ஏங்கிய டயேன் விலங்குகளிடம் பாசமாக இருக்க ஆரம்பித்தார். வீட்டில் இருக்கிற தங்கமீன் மீது ஆரம்பித்த அன்பு அடுத்து குதிரைகள் மீதும் படர்கிறது. குதிரையேற்றமும் கற்றுக்கொள்கிறார்.

Dian Fossey

பள்ளிக்கல்வியை முடித்தவரிடம் வளர்ப்புத்தந்தை, ‘பிசினஸ் தொடர்பான கல்வி’யை பயிலும்படி சொல்ல, டயேன் ஃபாசில் கால்நடை அறிவியலில் இளங்கலைப் பட்டம் படிப்பதென முடிவு எடுக்கிறார். விளைவு, அவர் படிப்புக்கான செலவை ஏற்றுக்கொள்ள முடியாது என்கின்றனர் பெற்றோர். டிபார்ட்மென்ட் ஸ்டோரில் கிளார்க் வேலைபார்த்தபடியே படிக்க ஆரம்பிக்கிறார். இயற்பியலும் வேதியியலும் டயேனை பாடாய்ப்படுத்த, படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, உடல் நலம் குன்றியவர்களுக்கு செய்யப்படும் ஆக்குபேஷனல் தெரபி படிக்கிறார். படிப்பை முடித்த பிறகு, ஆட்டிசம் பாதிப்புக் கொண்ட குழந்தைகளின் மருத்துவமனையில் பணியாற்ற ஆரம்பிக்கிறார். அந்த மருத்துவமனையில் வேலைபார்த்த மருத்துவர் ஒருவர், ’தங்கள் பண்ணையில் இருக்கிற விலங்குகளை பராமரிப்பதற்கு உதவ முடியுமா’ என்று டயேனிடம் கேட்க, மகிழ்ச்சியாக அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார் டயேன். இந்த நேரத்தில்தான் சிறுவயதிலிருந்தே அவருக்கு இருந்த விலங்குகளின் மீதான பாசம் அதிகமாகி இருக்கிறது. அதுவே மெல்ல மெல்ல வனவிலங்குகளின் மீதான ஆர்வமாக மாறி இருக்கிறது.

1963-ல் ஆப்பிரிக்க காடுகளுக்கு டூர் செல்ல வாய்ப்புக் கிடைக்க, தன்னுடைய ஒரு வருட சம்பளத்தை கடனாக வாங்கிக்கொண்டு, கூடவே அதுவரை தான் சேமித்து வைத்திருந்த அத்தனை பணத்தையும் எடுத்துக்கொண்டு ஆப்பிரிக்கா செல்கிறார். அந்த 7 வார ட்ரிப் தான் டயேன் ஃபாசில் வாழ்க்கையை மலை கொரில்லாக்களை நோக்கி திருப்பியிருக்கிறது. அங்குதான் மலை கொரில்லாக்களைப்பற்றி ஆராய்ச்சி செய்துவந்த ஆராய்ச்சியாளர்களை சந்தித்திருக்கிறார். சென்ற இடத்தில் டயேனின் கால் உடைந்துவிட, ஆராய்ச்சியாளர்களுடைய டென்ட்டில் தங்க நேரிட, மலை கொரில்லாக்களைப்பற்றிய அவர்களுடைய உரையாடலையும் கேட்க நேரிட்டிருக்கிறது. டூர் முடிந்து திரும்பி வந்தவருடைய ஆப்பிரிக்க டூர் அனுபவங்கள் கட்டுரைகளாக பத்திரிகைகளில் வெளிவந்தன. அடுத்த 3 வருடங்களில் வாங்கிய கடனை அடைக்கிறார் டயேன். இந்த நேரத்தில் லீக்கி என்கிற புகழ்பெற்ற வனவிலங்கு ஆராய்ச்சியாளர் ஆப்பிரிக்கா டூர் ஒன்றை ஏற்பாடு செய்கிறார். சென்ற முறை ஆப்பிரிக்க காட்டுக்கு டூர் வந்த டயேன் ஃபாசில் மலை கொரில்லாக்கள் மீது காட்டிய ஆர்வத்தை நினைவு வைத்திருந்த அவர், மலை கொரில்லாக்கள் பற்றிய நீண்ட கால ஆய்வுக்கான அந்த டூருக்கு டயேனையும் அழைக்கிறார். அந்த மலை கொரில்லாக்களுக்காக, தான் கொலை செய்யப்படப்போகிறோம் என்பதே தெரியாமல் மகிழ்ச்சியாக கிளம்புகிறார் டயேன்.

Dian Fossey

ஆப்பிரிக்காவில் உள்ள ருவேண்டா காட்டில் டயேன் ஃபாசிலுக்கென ஒரு டென்ட் அமைக்கப்படுகிறது. மலை கொரில்லாக்களைப்போலவே நடக்க, சாப்பிட என செய்து அவற்றின் கவனத்தை தன்பக்கம் திருப்ப முயற்சி செய்கிறார். ஆனால், அது நடக்காது என தெரிந்ததும், ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் பரிவாக நடந்துகொள்ள உதவிய ஆக்குபேஷனல் தெரபியை இந்த மலை கொரில்லாக்களிடமும் பயன்படுத்த ஆரம்பிக்கிறார். பலன் கிடைக்கிறது. காடெங்கும் நடந்து கொரில்லாக்களை கூர்ந்து கவனித்து டயேன் குறிப்பெடுக்க, அதுவரை மனிதர்கள் ஆபத்தானவர்கள் என்று அஞ்சிக்கொண்டிருந்த மலை கொரில்லாக்கள் அவரிடம் நெருங்கி வந்தன.

அங்குள்ள விருங்கா மலைப்பகுதியில் ஆய்வு மையம் நிறுவினார். சுமார் 10,000 அடி உயரத்தில் உள்ள மலைப்பகுதிகளில் பல வருடங்கள் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டார். மலைப்பிரதேச கொரில்லாக்களைப் பாதுகாக்க இவர் மேற்கொண்ட பணிகளை உலகமே வியந்து பாராட்டியது. டயேனின் ஆய்வுகளைப் பாராட்டும் வகையில் 1970-ம் ஆண்டு, நேஷனல் ஜியோகிராஃபிக் இதழின் அட்டைப்படத்தில் இடம்பெற்றார். 1980-ல் மலை கொரில்லாக்களின் உடலியல், நடத்தை, வலுவான குடும்ப உறவுகள் பற்றி ஆய்வுக்கட்டுரையை சமர்பித்து இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். ’கொரில்லாஸ் இன் தி மிஸ்ட்’ என்ற புத்தகத்தை 1983-ல் எழுதினார். அதே பெயரில் பின்னர் அது ஹாலிவுட் படமாகவும் வந்தது.

Dian Fossey

மலை கொரில்லாக்களை கடத்துபவர்களுக்கு டயேன் மிகப்பெரிய தடையாக இருந்திருக்கிறார். அந்தக் கடத்தல்காரர்களை கைது செய்ய வனத்துறை அதிகாரிகளுக்கும் உதவி செய்திருக்கிறார். மிருகக்காட்சி சாலைகளில் வைப்பதற்காக இங்கிருந்து பிடித்து செல்லப்பட்ட இரண்டு மலை கொரில்லாக்கள் ஒரே நேரத்தில் இறந்துவிட, இதற்கு எதிராகவும் குரல் கொடுக்க ஆரம்பித்தார் டயேன். மலை கொரில்லாக்களை கடத்துபவர்களுக்கு எதிராக அவர் நடத்திய போராட்டத்தில், கடத்தல்காரார்களிடம் இருந்து தப்பித்து காயத்துடன் அவரிடம் அடைக்கலமாகிய ‘டிஜிட்’ என்று இவர் பெயரிட்டு அழைத்த சிறிய கொரில்லாவும் கொல்லப்பட்டது. கண்ணீருடன் மலையுச்சியில் அதற்கென ஒரு கல்லறை எழுப்பினார் டயேன். இதன் பின்னர், கொரில்லாக்களின் பாதுகாப்புக்கு நிதியுதவி செய்ய ‘டிஜிட் ஃபண்ட்’ என்ற அமைப்பை தொடங்கினார்.

1985 டிசம்பர் 27 அன்று தன்னுடைய இருப்பிடத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுக்கிடந்தார் டயேன் ஃபாசில். காட்டின் வளத்தைக் கொள்ளையடித்தவர்களுக்கு எதிராகப் போராடியதால் கொல்லப்பட்டார்; கொரில்லாக்களைக் கடத்துபவர்களுக்கு எதிராக போராடியதால் கொல்லப்பட்டார்; மலை கொரில்லாக்கள் வாழ்ந்த நிலத்தை சுற்றுலாவுக்காகப் பயன்படுத்த விரும்பிய சிலரால் கொல்லப்பட்டார் என பல யூகங்கள் டயேனின் கொலையைப்பற்றி சொல்லப்பட்டன. அவருடைய உடல், டயேன் வளர்த்து வந்த ’டிஜிட்’ என்ற அந்த சிறிய கொரில்லாவுடைய கல்லறையின் பக்கத்திலேயே புதைக்கப்பட்டது.

Dian Fossey

குளிர், இருட்டு, எரிமலைகளின் சரிவுகளில், புற்கள்கூட ஆறடி உயரமுள்ள விருங்கா காடுகளில் கிட்டத்தட்ட 20 வருடங்களாக மலை கொரில்லாக்களைப்பற்றி ஆராய்ச்சி செய்த இந்த வனவிலங்கு ஆய்வாளரின் வாழ்க்கையிலும் காதல் கடந்து சென்றிருக்கிறது. தன் பெற்றோரிடமிருந்து தனக்கு கிடைக்காத அன்பை ஆப்பிரிக்க மலை கொரில்லாக்களுக்கு வாரி வழங்கிய டயேன் ஃபாசியை மறக்க முடியாதல்லவா?

Vikatan play

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

Chennai : தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கில் இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்... காரணம் என்ன?

சென்னையின் கடற்கரைப் பகுதிகளான காசிமேடு, திருவொற்றியூர் தொடங்கி நெம்மிலி குப்பம், ஈச்சம்பாக்கம் எனத் தொடர்ந்து ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியிருக்கின்றன. கடந்த 15 நாள்களில் மட்டும் சுமார் 350-க்கும் மேற்ப... மேலும் பார்க்க

US Los Angeles fires: பற்றி எரியும் அமெரிக்க வர்த்தக பூமி - உண்மை நிலவரம்... முழு அலசல் | Long Read

கலிபோர்னியா காட்டுத் தீஅமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. இவற்றில் கலிபோர்னியா மாகாணம் தனித்துவமானது. இந்த மாகாணத்தின் ஒரு ஆண்டின் Gross State Product (GSP) $4.1 டிரில்லியன் டாலர் ஆகும்.‌ மொத்... மேலும் பார்க்க

ஊட்டி: வனவிலங்கு தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரம்; காத்திருந்த வனத்துறை கூண்டில் சிக்கிய கரடி!

வனவிலங்குகளுக்கான வாழிடச் சூழல் அருகி வரும் நீலகிரியில் மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஊட்டி அருகில் உள்ள எடக்காடு சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த சதீஷ் குமார் என்கிற இ... மேலும் பார்க்க

Los Angeles fires: காட்டுத்தீயும் பொசுங்கிய பெரு நகரமும்... தீக்கிரையாகும் ஹாலிவுட் நகரம் | Album

Los Angeles firesLos Angeles firesLos Angeles firesLos Angeles firesLos Angeles firesLos Angeles firesLos Angeles firesLos Angeles firesLos Angeles firesLos Angeles firesLos Angeles firesLos Angeles f... மேலும் பார்க்க

ஊட்டி: பாறையில் சரிந்து விழுந்த யானைக்கு நேர்ந்த சோகம்; சத்தம் கேட்டுப் பதறிய மக்கள்; என்ன நடந்தது?

ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாக இருக்கிறது நீலகிரி பல்லுயிர் பெருக்க வள மண்டலம். ஆனால், யானைகளின் வாழிடங்கள் மற்றும் வழித்தடங்களில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முறையற்ற வள... மேலும் பார்க்க