Doctor Vikatan: ஒருநாளைக்கு எத்தனை முட்டைகள் சாப்பிடலாம், மஞ்சள் கருவைத் தவிர்க்க வேண்டுமா?
Doctor Vikatan: ஒரு நாளைக்கு ஒரு நபர் எத்தனை முட்டைகள் எடுத்துக்கொள்ளலாம். பச்சை முட்டை, வேகவைத்த முட்டை- இரண்டில் எது சிறந்தது, மஞ்சள் கருவைத் தவிர்க்க வேண்டும் என்பது உண்மையா? முட்டை அதிகம் எடுப்பதால் புரதச்சத்து அதிகமாகி, கிட்னி பாதிக்கப்பட வாய்ப்பு உண்டா?
பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்.
ஒருவர் ஒரு நாளைக்கு எத்தனை முட்டைகள் சாப்பிடலாம் என்று தெரிந்துகொள்வதற்கு முன், முட்டை ஒருவரது ஆரோக்கியத்தில் எப்படிப்பட்ட பங்கை வகிக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். முட்டையில் முழுமையான புரதச்சத்து கிடைக்கும் என்பதுதான் இதில் சிறப்பான விஷயமே.
வேகவைத்த முட்டை ஒன்றில் 6 கிராம் புரதச்சத்து கிடைக்கும். அதில் 5 கிராம் அளவுக்கு கொழுப்புச்சத்து இருக்கும். புரதச்சத்து நிறைந்தது என்பதற்காக ஒருவர் அளவுக்கதிமாக முட்டை எடுத்துக்கொள்வது செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும். வயிற்று உப்புசம், வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தலாம். எனவே, ஆரோக்கியமான ஒரு நபர், ஒரு நாளைக்கு 2 முதல் 3 முட்டைகள் வரை எடுத்துக்கொள்ளலாம். அதைத் தாண்டி போக வேண்டாம்.

பச்சை முட்டையா, வேக வைத்த முட்டையா என்று கேட்டால், வேகவைத்த முட்டைதான் சிறந்தது. பச்சை முட்டையில் கிருமிகள் இருக்க வாய்ப்புகள் அதிகம். தவிர, அது ஒவ்வாமையையும் ஏற்படுத்தக்கூடும். சரியாகச் சுத்தம் செய்யாமல் எடுத்துக்கொள்ளும் பட்சத்தில், பச்சை முட்டை சாப்பிடுவோருக்கு அலர்ஜி ஏற்படலாம். வாந்தி, குடல் பாதிப்பு, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம். அதுவே, முழுமையாக வேகவைத்த முட்டையில், இந்தப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பில்லை என்பதால், அதுவே பாதுகாப்பானதும்கூட.
பொதுவாகவே, முட்டையில் மஞ்சள் கருவைத் தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்துவோம். மஞ்சள்கருவில் 5 கிராம் அளவு கொழுப்புச்சத்து உள்ளது. ஏற்கெனவே கொலஸ்ட்ரால் பாதிப்புக்குள்ளானவர்கள், இதயம் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள், வயதானவர்கள், சாப்பிடும் கொழுப்பை எரிக்க இயலாதவர்கள் போன்றோருக்கு மஞ்சள் கருவால் கொழுப்பு அதிகமாகவும், ஏற்கெனவே உள்ள உடல்நல பாதிப்புகள் மேலும் தீவிரமடையவும் வாய்ப்புகள் அதிகம்.

ஒருவரது எடைக்கேற்ப அவரது அன்றாட புரதச்சத்து தேவை நிர்ணயிக்கப்படும். உதாரணத்துக்கு, 60 கிலோ எடையுள்ள ஒரு நபருக்கு 60 கிராம் அளவு புரதச்சத்து தேவை. அந்த 60 கிராம் புரதத்துக்கு மட்டுமன்றி, அதையும் தாண்டி 80 கிராம் அளவுக்குப் புரதச்சத்தை வெறும் முட்டையின் மூலம் மட்டுமே ஒருவர் உடலில் சேர்த்துக்கொள்கிறார் என வைத்துக்கொள்வோம். அந்நிலையில், புரதச்சத்தின் அளவு அதிகரித்து அது கிட்னியை பாதிக்கும் ஆபத்து உண்டு. இன்னொரு தரப்பினர், முட்டைகளையும் அதிக எண்ணிக்கையில் எடுத்துக்கொண்டு, வேறு உணவுகளின் மூலமும் புரதச்சத்தைச் சேர்த்துக்கொள்வார்கள். அதுவும் தவறானது. எடைக்கேற்ற புரதம் உடலில் சேரும்படி பார்த்துக்கொண்டால் போதும். 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பது முட்டைக்கும் பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளவும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.