கங்கைகொண்ட சோழபுரம்: திமுக - பாஜகவின் அரசியல் ஆதாய நாடகம்! விஜய் விமர்சனம்
Doctor Vikatan: தாம்பத்திய உறவின் போது வலி; சிசேரியனால் ஏற்பட்ட பாதிப்பு.. தீர்வு உண்டா?
Doctor Vikatan: என் வயது 30. எனக்கு கடந்த 3 மாதங்களாக அடிக்கடி வயிற்றுவலி, தாம்பத்திய உறவின் போது வலி வருகிறது. ஆரம்பத்தில் வலி நிவாரணிகள் எடுத்தும் பலனில்லை. கடைசியாக ஒரு மருத்துவர் செக் செய்துவிட்டு, இது சிசேரியன் செய்தபோது ஏற்பட்ட ஒட்டுதல்கள் (C-section adhesions) காரணமாக ஏற்பட்டது என்று சொன்னார். மருந்துகள் கொடுத்திருக்கிறார். குணமாகாவிட்டால் ஆபரேஷன் தேவைப்படலாம் என்கிறார். இது என்ன பிரச்னை.... விளக்க முடியுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து அறிகுறிகளுமே சிசேரியன் அறுவை சிகிச்சையின் விளைவாக ஏற்பட்டவையாகத்தான் தெரிகின்றன. அதாவது உடலில் திடீரென அசாதாரண அறுவை சிகிச்சை நிகழும்போது, உடலின் உள்ளே ஸ்கார் டிஷ்யூ உருவாகத் தொடங்கும்.
அதாவது, அறுவை சிகிச்சையின் விளைவாக உடலின் இயல்பான திசுக்கள் அழிந்துபோகும்போது, அதை குணப்படுத்த உடல் உருவாக்கும் ஒரு ஃபைப்ரஸ் திசுதான் ஸ்கார் டிஷ்யூ. இது இயற்கையான குணப்படுத்தும் செயல்முறையின் ஒரு பகுதியாகும். இதன் விளைவாக உடலின் உள் உறுப்புகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ள ஆரம்பிக்கும்.
கர்ப்பப்பை, சினைக்குழாய், குடல் என எல்லாமே ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ள ஆரம்பிக்கும். இதன் காரணமாகத்தான் உங்களுக்கு தொடர்ச்சியாக வலி இருக்கும். வயிறு தொடர்பான அறுவை சிகிச்சை ஒருமுறை நடந்தாலே இது போன்ற பிரச்னைகளை நாங்கள் அதிகம் பார்ப்பதுண்டு.
சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சிசேரியன் அறுவை சிகிச்சைகள் நடந்திருக்கும். அவர்களுக்கும் இதுபோன்ற பாதிப்பு ஏற்படுவதைப் பார்க்கலாம்.

இந்தப் பிரச்னையின் அறிகுறியாக சிலருக்கு தொடர்ச்சியான அடிவயிற்றுவலி இருக்கும். சிலருக்கு நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி தாம்பத்திய உறவின்போது வலி ஏற்படும். சிலருக்கு குடல் பகுதி ஒட்டிக்கொண்டிருப்பதன் விளைவாக வயிற்று உப்புசம் மற்றும் செரிமான பிரச்னைகள்கூட வரலாம்.
சிலருக்கு முறைதவறிய மாதவிடாய் சுழற்சியும் உடல் கனத்தது போன்ற உணர்வும் இருக்கும். வலி அதிகமாக இருப்பதாகச் சொல்பவர்களுக்கு மருத்துவர்கள் வலி நிவாரணிகளைப் பரிந்துரைப்பார்கள். ஆனால், அவற்றையும் தொடர்ந்து எடுத்துக்கொள்ள அறிவுறுத்த மாட்டார்கள். ஆன்டிஇன்ஃப்ளமேட்டரி மருந்துகள் கொடுக்கும்போது வீக்கம் குறைய வாய்ப்பு உண்டு. ஆனால், மருந்துகளின் மூலம் ஸ்கார் டிஷ்யூ பிரச்னையை சரிசெய்ய முடியாது.
லேப்ராஸ்கோப்பி சிகிச்சையின் மூலம் எங்கெல்லாம் திசுக்கள் ஒட்டிக்கொண்டுள்ளனவோ, அவற்றை நீக்கிவிட முடியும். இந்தச் சிகிச்சையை 'அட்ஹெஸ்சியோலைசிஸ்' (Adhesiolysis) என்று சொல்வோம். இந்தச் சிகிச்சைக்குப் பிறகு சம்பந்தப்பட்டவரின் வாழ்க்கைத் தரத்தில் ஓரளவு முன்னேற்றம் தெரியும். ஆனால், சரிசெய்தாலும் மறுபடி அது ஒட்டுவதற்கான வாய்ப்புகள் இருப்பதையும் மறுக்க முடியாது. எனவே, நீங்கள் முதல் வேலையாக மருத்துவரை அணுகி, உங்கள் பிரச்னையின் தீவிரத்தைச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு பெயின் கில்லர் தேவைப்பட்டால் அதைப் பரிந்துரைப்பார்.

எந்தெந்த வேலைகளைச் செய்தால் வலி அதிகரிக்கிறது என்பதைக் குறித்து வரச் சொல்வார். உதாரணத்துக்கு, பீரியட்ஸின்போது வலி அதிகரிக்கிறதா, தாம்பத்திய உறவின்போதா என்பதைக் குறித்து வர வேண்டும். பிசியோதெரபி, இடுப்புத்தசைகளுக்கான யோகா பயிற்சிகள் போன்றவை உதவும். குடல் தொடர்பான பிரச்னைகள் இருந்தால், எளிதில் செரிமானமாகும் உணவுகளை எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுவீர்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.