கரோனாவுக்குப் பின் உடல் சோர்வு அதிகம் ஏற்படுகிறதா? என்ன காரணம் தெரியுமா?
கொவிட் 19 தொற்றால் ஏற்பட்ட பாதிப்புக்குப்பின் உடல் சோர்வு அதிகமாக ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பது முதல்கட்ட ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் உடலில் நெடுங்காலத்துக்கு ஏற்படும் மாற்றங்கள் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்மூலம் முக்கியமாக தெரிய வந்திருப்பது என்னவென்றால், உடலில் ஆக்ஸிஜன் இயக்கத்தில் பாதிப்பு உண்டாகும் என்பதே.
தென்னாப்பிரிக்காவின் ஸ்டெல்லென்போஸ்ச் பல்கலைக்கழக பேராசிரியர்களின் ஆராய்ச்சியில் முதல்கட்டமாக இந்த தரவுகள் கிடைக்கப்பட்டுள்ளன.
கரோனாவை ஏற்படுத்தும் வைரஸ் (SARS-CoV-2) நுண்கிருமியானது, ரத்த நாளங்களில் ஒருவகை வேதியியல் மாற்றங்களைச் செய்வதால் ரத்தத்தின் அடர்த்தி அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு ஸாம்பி செல்ஸ், அதாவது பேய் திசுக்கள் எனலாம், என்று பெயரிட்டுள்ளனர்.
ஸாம்பி செல்களால் ரத்த நாளங்களில் ஆங்காங்கே சிறிய அளவிலான கட்டிகள் உருவெடுக்கின்றன. இதனைத்தொடர்ந்து, நாளங்களில் ரத்த ஓட்டத்தின் வேகம் வேகம் குறைகிறது. அதன் விளைவாக செல்களுக்கும் தசைகளுக்கும் தேவையான ஆக்ஸிஜன் கிடைப்பது குறைகிறது... உடல் உறுப்புகளின் செயல்பாடும் பலவீனமடைகிறது! இந்த காரணத்தால் மனிதர்கள் சோர்ந்து தளர்ந்து விடுகின்றனர்.
இதற்கிடையில், உடற்பயிற்சி செய்யும்போது ரத்த நாளங்கள் மேலும் கூடுதலாக இறுக்கப்படுகின்றன. இதனால் தசைகள் போதுமான அளவுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போராடும் நிலை ஏற்படுகிறது.
மூளையையும் இந்த செயல்பாடு விட்டுவைக்கவில்லை என்பதால், மூளையில் ரத்த ஓட்டம் குறைந்து மயக்கமும் குழப்பமும் ஏற்படுகிறது.
குடலில் உள்ள தசைகளை தளர்வடையச் செய்வதனால் குடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் ரத்த ஓட்டத்தில் கலக்கும் நிலை உருவாவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகவும் பாக்டீரியாக்களால் ரத்த நாளங்களில் வீக்கம் ஏற்படுகிறது.
உடலில் நோயெதிர்ப்பு சக்தியை விஞ்சும் அளவுக்கு ஸாம்பி செல்கள் திறன் பெற்றுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மனிதர்களுக்கு நெடுங்காலத்துக்கு இந்த பாதிப்பு இருக்குமென்கின்றனர். தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது...