பொதுவுடைமை, திராவிட இயக்கங்கள் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் முதல்வா் மு.க.ஸ்டாலின...
Gaza: பாலஸ்தீனம் ஐநாவில் அங்கீகரிக்கப்படுமா... பிரான்ஸின் நகர்வும், அமெரிக்காவின் அழுத்தமும்!
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையிலான போர் மனிதாபிமான கேள்விகளைத் தீவிரமாக எழச் செய்துள்ளது. சமீபத்தில் பிரான்ஸ் முதல் ஜி 7 நாடாக, ஐநாவில் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்போம் எனத் தெரிவித்தது. தொடர்ந்து கனடாவும் இதே முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக வாதிடுபவர்களால் நேர்மறையானதாக, தீர்வை நோக்கிய முன்னேற்றமாக இவை பார்க்கப்படுகிறது.

ஐநாவில் பாலஸ்தீனம்!
ஐநாவில் ஒரு நாடு அங்கீகரிக்கப்படப் பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதல் அவசியம். பாலஸ்தீனம் 2011ம் ஆண்டே தனி நாடாக அங்கீகாரம் பெற விண்ணப்பித்திருந்தாலும் தொடர்ந்து அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வருகிறது.
ஐநாவில் தற்போது பாலஸ்தீனம் பார்வையாளராக உள்ளது. சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் உட்படப் பல சர்வதேச அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது. 2024 பாலஸ்தீனம் விவாதங்களில் பங்கேற்கவும் தலைப்புகளை முன்மொழியவும் உரிமை வழங்கப்பட்டது. ஆனாலும், விவாதங்களில் வாக்களிக்கும் உரிமை கிடையாது.
பாலஸ்தீனத்தை எதிர்க்கும் இஸ்ரேல், அமெரிக்கா!
ஐநாவில் உறுப்பினராக உள்ள 193 நாடுகளில் 140க்கும் மேற்பட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரித்துள்ளன. என்றாலும் இஸ்ரேலுக்கு வரையறையற்ற ஆதரவு வழங்கும் அமெரிக்காவும், அதன் கூட்டாளிகளான ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் பாலஸ்தீனத்துக்குத் தனி நாடு அங்கீகாரம் வழங்குவதை எதிர்த்து வருகின்றன. 2024ல் இதுகுறித்த விவாதத்தில் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி பாலஸ்தீனத்தின் அங்கீகாரத்தைத் தடுத்தது அமெரிக்கா.
ஆஸ்திரேலியாவும் அமெரிக்காவும் இன்னும் சில நாடுகளும் 'இரண்டு அரசு' தீர்வை முன்வைத்தாலும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மறுக்கின்றன. இஸ்ரேலும் பாலஸ்தீனமும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அமெரிக்கா கூறுகிறது. ஆனால் இதன்விளைவாக பாலஸ்தீனம் தனி நாடாவதைத் தடுக்கும் அதிகாரம் இஸ்ரேலுக்கு வழங்கப்படுவதுதான் மிச்சம்.
It’s not famine. It’s forced starvation.
— Mohamad Safa (@mhdksafa) July 27, 2025
Mass starvation stalks Gaza as deaths from hunger rise. pic.twitter.com/zllQd0cxo8
இஸ்ரேலின் பார்வையில் பாலஸ்தீனத்துக்குத் தனி நாடு அந்தஸ்து கொடுப்பது, இஸ்ரேலின் முடிவை எழுதுவதாகும். தற்போது கனடா, பிரான்ஸ் நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதை, "2023 அக்டோபர் தாக்குதலுக்குக் கொடுக்கப்பட்ட பரிசு" என விமர்சிக்கிறது இஸ்ரேல்.
அமைதிக்காக... பிரான்ஸைப் பின் தொடருமா கனடா!
"அமைதி சாத்தியமானது. உடனடியாக காசாவில் போர் நிறுத்தம் தேவை. அனைத்து பணயக் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். காசாவுக்குப் பெரிய அளவிலான மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும்" எனப் பேசிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன், செப்டம்பர் 2025ல் நடைபெறும் ஐநா பொதுக் கூட்டத்தின் 80வது அமர்வில் அதிகாரப்பூர்வமாக பிரான்ஸ் பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரிக்கும் எனக் கூறியுள்ளார்.
கனடாவின் மேல் வரி விதிப்பதாகவும், மற்றொரு மாகாணமாக இணைத்துக்கொள்வதாகவும் அமெரிக்கா மிரட்டுவதற்கு எதிரான நடவடிக்கையாக கனடா இந்த விவகாரத்தில் சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டுமெனக் குரல்கள் எழுந்துள்ளன. பிரிட்டனிலும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரிக்க வேண்டுமென அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
ஏற்கெனவே பிரான்ஸின் முடிவை அமெரிக்காவும் இஸ்ரேலும் கடுமையாகக் கண்டித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோ, "பாலஸ்தீனத்தைத் தனி நாடாக பிரான்ஸ் இப்போதே அங்கீகரிப்பது 2023 அக்டோபா் 7-ஆம் தேதி ஹமாஸ் அமைப்பின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் அவமதிப்பு. இது ஹமாஸின் பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்ல மட்டுமே உதவும்" என்று சாடினார்.

காசாவின் நிலை!
இதற்கிடையில் இந்த மாதத்தில் மட்டுமே 56 பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளனர். பலரும் வாரக் கணக்காக தண்ணீர் அருந்தாமல், பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகியிருக்கின்றனர். உணவு, தண்ணீர் தேடிச் செல்லும் பலர் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவின் நீர் நிலைகளில் இஸ்ரேல் ராணுவம் கான்கிரீட் ஊற்றுகிறது. அங்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைவதைத் தடுத்து வருகிறது. பட்டிச் சாவை நோக்கிய எலும்பும் தோலுமான பாலஸ்தீன குழந்தைகளின் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு நெஞ்சை உலுக்குகின்றன...
இன்னொரு சோமாலியாவாக மாறும் காஸா - அதிகரிக்கும் பட்டினி சாவுகள்! உலகம் தன் மனசாட்சியைத் திறக்குமா?