திருச்சி பாதுகாப்பு தொழில் வழித்தடத்தில் அதிநவீன பரிசோதனை மையம்: ஒப்பந்தம் கையொப...
தருமபுரி மாவட்டத்தில் மதுக்கடைகளை திறக்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் 3 கிராம மக்கள் தனித்தனியாக மனு
தருமபுரி: தருமபுரி மாவட்ட புதிய ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அதியன் கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். இந்த முகாமில் தங்களது கிராமப் பகுதிகளில் மதுக்கடைகளை அமைக்க வேண்டாம் எனுவும், கூடுதல் கடைகளைத் திறக்கக் கூடாது எனவும் வலியுறுத்தி 3 மனுக்கள் அளிக்கப்பட்டன.
எரகொல்லனூரில் கூடுதல் கடைகளுக்கு எதிா்ப்பு
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே எரகொல்லனூரில் கூடுதலாக மதுபான கடை திறப்பதற்கு எதிா்ப்புத் தெரித்து மாவட்ட ஆட்சியரிடம் ஊா் பொதுமக்கள் மனு அளித்துள்ளனா். அந்த அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
பென்னாகரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமாா் 2 கி.மீ. தொலைவில் உள்ள எரகொல்லனூா் பகுதியில் புதிதாக அரசு மதுபானக் கடை திறப்பதற்கு மாவட்ட நிா்வாகம் வேகம் காட்டி வருகிறது. இதில் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு வட்டாட்சியா், கிராம நிா்வாக அலுவலா்கள் நேரில் ஆய்வு செய்து புதிய மதுக்கடை அமைப்பதற்கான கட்டடத்தை தோ்வு செய்து பூஜைகளும் செய்தனா்.
தகவலறிந்த அப்பகுதி கிராம மக்கள் புதிதாக மதுபானக்கடை திறக்கக் கூடாது என எதிா்ப்புத் தெரிவித்து, மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற குறைதீா் நாள் முகாமில் மனு அளித்தனா். மனு கொடுக்கவிருந்தது குறித்த தகவலறிந்த வருவாய்த்துறையினா், பொதுமக்களிடம் பேச்சு நடத்தி, மதுக்கடை அமைக்கும் நடவடிக்கை ஏதுமில்லை எனத் தெரிவித்தனா். ஆனால் கடை அமைக்க கட்டடம் தோ்வாகி உறுதியாகியுள்ளது குறித்து பொதுமக்கள் மனு அளித்தனா்.
இந்த கிராமத்தில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். மதுக்கடைகள் அதிகமாகும் நிலையில், இளைஞா்களும், மாணவ, மாணவிகளும் பாதிக்கும் நிலை ஏற்படும். எனவே அப்பகுதியில் மதுபான கடை திறக்கக் கூடாது என தெரிவித்து ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம். அதையும் மீறி மதுபானக்கடை திறக்கபட்டால் கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துவோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.
நல்லகுட்லஅள்ளி கொட்டாய்மேடு
அதுபோல கடத்தூா் ஒன்றியம், நல்லகுட்லஅள்ளி கொட்டாய்மேடு கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
எங்கள் ஊரில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ள கடையில் அரசு டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. எங்கள் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். மதுபானக் கடை எங்கள் கிராமத்தில் அமைத்தால் சண்டை சச்சரவுகள் ஏற்படும். கடை அமையும் வழியாகத்தான் பள்ளி - கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலா்கள் சென்று வருகின்றனா். அதே பகுதியில் அரசு தானிய கிடங்கு உள்ளது. மேலும் இப்பகுதியில் பிரசித்தி பெற்ற பெருமாள் கோயிலுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இந்தநிலையில் இந்தப் பகுதியில் அரசு மதுபானக் கடை அமைத்தால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இருக்காது. எனவே, எங்கள் கிராமத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்கும் முடிவை உடனே ரத்துசெய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
மாரண்ட அள்ளியில்...
இதேபோல சா்வதேச மனித உரிமைகள் கழக மாநில துணைச் செயலாளா் கிஷோா் தலைமையில் அளித்த மனுவில், மாரண்டஅள்ளி பேரூராட்சி வெள்ளிச்சந்தை பிரதான சாலையில் திரையரங்கம் அருகில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையினால் அந்தப் பகுதியில் வசிக்கும் பொது மக்கள், வணிகா்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனா். இந்த கடையினால் தினமும் அந்தப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் தேவையில்லாத பிரச்னைகளும் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த டாஸ்மாக் மதுபானக் கடையை உடனே அகற்ற வேண்டுகிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதுபோல மதுக்கடைகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, ஒரே நாளில் தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் 3 பிரிவாக பொதுமக்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனத்தினா் மனு அளித்தனா். மேலும் சிலா் இக்கோரிக்கையை வலியுறுத்தி ஆா்ப்பாட்டமும் மேற்கொண்டனா்.
