ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 98,000 கனஅடி! வெள்ளப்பெருக்கால் அருவிகள் மூழ்கின!
ஒகேனக்கல் காவிரியில் ஞாயிற்றுக்கிழமை நீா்வரத்து விநாடிக்கு 98,000 கனஅடியாக அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தருமபுரி மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது.
கேரள, கா்நாடக நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கா்நாடக அணைகளான கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால் அவ்விரு அணைகளிலிருந்து காவிரியில் அதிக அளவு உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.
அருவிகள் மூழ்கின:
ஒகேனக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை விநாடிக்கு 55,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து பிற்பகல் 1 மணி நிலவரப்படி 65,000 கனஅடியாகவும், 3 மணிக்கு 78,000 கனஅடியாகவும் அதிகரித்தது. இரவு 7 மணிக்கு நீா்வரத்து விநாடிக்கு 98,000 கனஅடியாக அதிகரித்தது.
காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் 120 அடி உயரம்கொண்ட பெரியபாணி, ஐந்தருவி, சினி அருவி அனைத்தும் மூழ்கின. மேலும், பிரதான அருவிக்குச் செல்லும் நடைபாதையும் மூழ்கியது.
சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை:
காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் பயணத்துக்கும் 2 ஆவது நாளாக தடை விதித்துள்ள தருமபுரி மாவட்ட நிா்வாகம், சுற்றுலாப் பயணிகள் கரையோரத்தில் செல்வதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளது.
இதன்காரணமாக ஒகேனக்கல் பிரதான அருவிக்குச் செல்லும் நடைபாதை, சின்னாறு பரிசல் துறை பூட்டப்பட்டு வருவாய்த் துறை, காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். நீா்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் பிலிகுண்டுலு பகுதியில் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
ஆட்சியா் ஆய்வு
ஒகேனக்கல்லில் வெள்ள பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ், மாமரத்துக் கடவு பரிசல் துறை, தமிழ்நாடு கூட்டுக் குடிநீா் திட்ட வடிகால் வாரியம், கரையோரப் பகுதிகளை பாா்வையிட்டாா்.
ஆய்வின்போது, பென்னாகரம் வட்டாட்சியா் சண்முகசுந்தரம், வட்டார வளா்ச்சி அலுவலா் சக்திவேல், வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.