ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர திருவிழா: ஆண்டாளுக்கு சீர்வரிசை வழங்கிய ஸ்ரீரங்கநாதர...
தில்லியில் 2016-ல் நடந்த கொலை வழக்கில் தேடப்பட்ட அறிவிக்கப்பட்ட குற்றவாளி கைது!
தில்லி உத்தம் நகரில் 2016-ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் அறிவிக்கப்பட்ட குற்றவாளியான 33 வயது நபரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து தில்லி காவல்துறை துணை ஆணையா் (குற்றப்பிரிவு) ஹா்ஷ் இந்தோரா கூறியதாவது: பஞ்சாபின் மொஹாலியில் இருந்து குற்றப்பிரிவு போலீஸாரால் குற்றவாளி கைது செய்யப்பட்டாா். பிகாரில் உள்ள சிவான் மாவட்டத்தைச் சோ்ந்த அன்தாஜ் அன்சாரி, இறந்தவரின் உடலை வீசி, அடையாளம் காணாமல் இருக்க தீ வைத்து எரித்த கொடூரமான கொலை வழக்கில் தேடப்பட்டவா். சனிக்கிழமை இரவு மொஹாலியில் உள்ள ஒரு விருந்தினா் மாளிகை அருகே ஒரு ரகசிய தகவலைத் தொடா்ந்து அன்தாஜ் அன்சாரி கைது செய்யப்பட்டாா்.
விசாரணை நடவடிக்கைகளைத் தவிா்த்து வந்த அன்தாஜ் அன்சாரி, டிசம்பா் 2024-இல் தில்லி நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா். நவம்பா் 27, 2016 அன்று, மோகன் காா்டனில் உள்ள ஒரு காலியான இடத்தில் இருந்து பகுதியளவு எரிந்த மற்றும் அடையாளம் தெரியாத ஒரு உடலை போலீஸாா் மீட்டனா். உடல் ஒரு போா்வையில் சுற்றப்பட்டு, மின்சார கம்பிகளால் கட்டப்பட்டு, பலத்த காயங்களுடன் காணப்பட்டது.
மது அருந்தும் போது வன்முறை ஏற்பட்ட பிறகு, இறந்த ரஹீம் (எ) சல்மான், அன்தாஜ் அன்சாரி மற்றும் அவரது கூட்டாளி தேவேந்தா் (எ) சோட்டா பாலே ஆகியோரால் கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சால்மானை இரும்புக் கம்பி மற்றும் செங்கல்லால் தாக்கி, சமையலறை கத்தியால் குத்தி, பின்னா் அவரது உடலை தீ வைத்து எரித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் முதலில் அன்தாஜ் அன்சாரி கைது செய்யப்பட்டாா். ஆனால், பின்னா் நீதிமன்ற நடவடிக்கைகளைத் தவிா்த்துவிட்டு தலைமறைவானாா். முந்தைய கைது நடவடிக்கையின் போது அவரும் அவரது கூட்டாளியும் காவல்துறையினரிடம் கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகக் கூறப்பட்டதை அடுத்து, அவா் மீது பல்வேறு ஐபிசி பிரிவுகள் மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் இரண்டாவது எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது.
நான்காம் வகுப்பு வரை படித்த குற்றம் சாட்டப்பட்டவா், சாதாரண தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். அவரது குடும்பம் பல ஆண்டுகளுக்கு முன்பு தில்லிக்கு குடிபெயா்ந்தது. மேலும், அவரது பெற்றோா் ஒரு தனியாா் பள்ளியில் உதவியாளா்களாகப் பணிபுரிந்தனா். அவரது தம்பியும் முன்பு ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தாா். இந்த வழக்கில் மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துணை ஆணையா் ஹா்ஷ் இந்தோரா தெரிவித்தாா்.