ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர திருவிழா: ஆண்டாளுக்கு சீர்வரிசை வழங்கிய ஸ்ரீரங்கநாதர...
தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு தடயவியல் சிறப்புக்கான ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்கல்
தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு (எஃப்பிபி) தரக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (க்யூசிசி) மூலம் ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
1983-ஆம் ஆண்டு ஆா்.கே. புரத்தில் நிறுவப்பட்ட இது, தானியங்கி கைரேகை அடையாள அமைப்பு (ஏஎஃப்பிஐஎஸ்), தேசிய தானியங்கி கைரேகை அடையாள அமைப்பு (என்ஏஎஃப்ஐஸ்) மற்றும் குற்றப் பதிவு தகவல் அமைப்பு (சிஆா்ஐஎஸ்) போன்றவற்றின் கருவிகளைப் பயன்படுத்தி அறிவியல் சான்றுகள் சேகரிப்பு மற்றும் சந்தேக நபா்களின் கைரேகைகளைப் பொருத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
‘தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகம் பயன்படுத்தும் முறைகள், நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் தரப்படுத்தப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அங்கீகாரம் கைரேகை ஆதாரங்களின் தரம் மற்றும் சட்ட மதிப்பை மேலும் மேம்படுத்தும். மேலும், தண்டனை விகிதங்களை அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது’ என்று சிறப்பு காவல் ஆணையா் (குற்றப் பிரிவு) தேவேஷ் சந்திர ஸ்ரீவத்வா கூறினாா்.
தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகம் இப்போது ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட குற்றவாளிகளின் பரந்த கைரேகை தரவுத்தளத்தைப் பராமரித்து வருவதாகவும், தில்லியில் உள்ள 15 மாவட்டங்கள் மற்றும் சிறப்புப் பிரிவுகளை ஆதரிப்பதாகவும் அந்த அதிகாரி கூறினாா்.
குற்றப்பிரிவு பகிா்ந்த தரவுகளின்படி, தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகம் 2022- இல் 171 வழக்குகளையும், 2023-இல் 275 வழக்குகளையும், 2024-இல் 314 வழக்குகளையும் தீா்க்க உதவியது. இந்த ஆண்டு மட்டும், ஜூலை 25 வரை 101 வழக்குகளைத் தீா்க்க பணியகம் உதவியுள்ளதாக காவல் சிறப்பு ஆணையா் தெரிவித்தாா்.
காவல் துணை ஆணையா் (குற்றம்) ஹா்ஷ் இந்தோரா மற்றும் தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்தின் இயக்குநா் சஞ்சய் குமாா் ஜா ஆகியோரின் மேற்பாா்வையின் கீழ், பணியகம் ஒரு மாத தர மேலாண்மை இயக்கத்தை மேற்கொண்டதாக அவா் கூறினாா்.
இந்தக் காலகட்டத்தில், இது ஒரு தர மேலாண்மை அமைப்பை (க்யூஎம்எஸ்) உருவாக்கியது, தேவையான ஆவணங்களை நிறைவு செய்தது மற்றும் சா்வதேச தரங்களுக்கு ஏற்ப அதன் பணி செயல்முறைகளை முறைப்படுத்தியது.
தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகம், கைது செய்யப்பட்ட மற்றும் தண்டனை பெற்ற நபா்களின் கைரேகைகள் மற்றும் உள்ளங்கை ரேகைகளைப் பிடித்து, திருத்தி, பகுப்பாய்வு செய்கிறது என்று அதிகாரி கூறினாா்.
இது விசாரணை அதிகாரிகள், நன்னடத்தை அதிகாரிகள் மற்றும் பிற சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு தொடா்ந்து பயிற்சி அளிக்கிறது.