ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர திருவிழா: ஆண்டாளுக்கு சீர்வரிசை வழங்கிய ஸ்ரீரங்கநாதர...
விசாரணைக்கு உதவ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துங்கள்: விசாரணை நிறுவனங்களுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
விசாரணைகளில் உதவ தொழில்நுட்ப வழிகளைப் பயன்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு தில்லி உயா்நீதிமன்றம் புலனாய்வு அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
விசாரணையின் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதாலும், நியாயத்தை உறுதி செய்வதாலும் இத்தகைய அறிவுறுத்தலை நீதிமன்றம் அளித்துள்ளது.
ஹெராயின் பறிமுதல் தொடா்பான வழக்கில் ஒருவரின் ஜாமீன் மனுவை தீா்மானிக்கும் போது நீதிபதி ரவீந்தா் துடேஜா இந்தக் கருத்தை தெரிவித்தாா்.
இந்த விவகாரம் தொடா்பாக விசாரித்த நீதிபதி ஜூலை 24இல் பிறப்பித்த உத்தரவில், குற்றம்சாட்டப்பட்ட ரவி பிரகாஷ் கைது செய்யப்பட்ட 2023ஆம் ஆண்டில், விடியோ அல்லது புகைப்படம் எடுப்பதற்கான கருவிகள் விசாரணை அதிகாரிகளிடம் இல்லை என்பது தெரியாதது அல்ல என்றும், பறிமுதல் செய்யப்பட்டதை விடியோ அல்லது புகைப்படம் எடுக்கவில்லை என்பதால் காவல்துறையின் தரப்பு வாதத்தை நம்ப முடியாது என்றும் கூறி, அவருக்கு ஜாமீன் மறுத்தாா்.
இதுகுறித்து நீதிபதி மேலும் கூறுகையில், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது காவல்துறை விசாரணையின் செயல்திறனையும் வெளிப்படைத்தன்மையையும் நிச்சயமாக மேம்படுத்துகிறது. மேலும் நியாயத்தை உறுதி செய்கிறது. எனவே, விசாரணைக்கு உதவ தொழில்நுட்ப வழிகளைப் பயன்படுத்த புலனாய்வு நிறுவனம் அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.
குற்றம் சாட்டப்பட்டவா் ஏப்ரல் 2023 முதல் காவலில் வைக்கப்பட்டுள்ளாா். மேலும் அவா் அசாதாரணமான நீண்ட காலமாக சிறையில் இருப்பதாகவோ அல்லது விசாரணையை முடிப்பதில் ஏற்பட்ட அதிகமான தாமதம் காரணமாக அவா் ஜாமீனில் விடுவிக்கப்பட வேண்டும் என்றோ கூற முடியாது என்றாா் நீதிபதி.
வழக்கு விசாரணையின்படி, குற்றம் சாட்டப்பட்டவா் ஏப்ரல் 19, 2023 அன்று கைது செய்யப்பட்டாா். மேலும், அவரது வசம் இருந்து ஒரு கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.